தேனீக்கள் போல் குவியும் மாணவர்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு
தேனீக்கள் போல் குவியும் மாணவர்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு
UPDATED : நவ 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரத்யேகமாக, சென்னை பல்கலைக் கழகத்தில் நவ. 19ம் தேதி நடந்த ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழக கல்வி வரலாற்றில் தனிச்சிறப்பு மிக்க ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, மாணவர்களுக்கு உந்து தியாக விளங்குகிறது. தேனீக்கள் கூட்டம் திரண்டு வந்திருக்கிறதோ என ஐயுறும் வகையில், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், பங்கேற்கும் வாய்ப்பை ‘தினமலர்’ வழங்கியிருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக, பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்திருக்கிறேன். முதல் முறையாக ‘தினமலர்’ மேடையில் தான், மாணவர்களும் என்னுடன் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சியை மாணவர்கள் நன்மைக்கான உருவாக்கி, மாணவர்களையும், ஆசிரியர்களையும் வெளியே அழைத்து வந்து, பல புதிய விஷயங்களை சொல்லித் தந்து, படிக்கும் முறைகளை ஒழுங்குபடுத்தி, 80 மதிப்பெண் பெறுபவர்கள் 100 மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகளை கற்றுத்தருகின்றனர். தேர்ச்சி பெறுவதற்கு சற்று குறைவான மதிப்பெண் பெறுபவர்கள், தேர்ச்சி பெறுவதற்கான வழிகளை சொல்லித் தருகின்றனர்.
நான் மதுரையில் தங்கியிருந்தபோது<, ஒருநாள் காலையில் எங்கு பார்த்தாலும் மாணவர்கள் கூட்டம். ‘என்ன இவ்வளவு கூட்டம்?’ எனக் கேட்டபோது, ‘தினமலர்’ நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்க செல்கின்றனர் என்று தெரிவித்தனர். ஒரு நிமிடம் அதிசயித்துப் போனேன். உண்மையிலேயே சரக்கு இருக்கிறது என்பதால் தான் மாணவர்கள் அங்கு செல்கின்றனர்.
மத்திய அரசு, அனைவருக்கும் கட்டாயக் கல்வி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் அனைவரும் முறையாக கல்வி கற்க வேண்டும்; அவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி தலைமையிலான இந்த அரசின் முயற்சிகளை நீங்கள் அறிவீர்கள்.
கடந்த 1946ம் ஆண்டு, தமிழகத்தின் தென்பகுதியில், திருவாங்கூர் சமஸ்தானத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளின் சாதாரண மக்களுக்கு, உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளுக்கு ஒரு காலத்தில் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது, ‘தினமலர்’ நாளிதழின் நிறுவனர் டி.வி.ஆர்., கட்டாயக் கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளை உருவாக்கி, கட்டாயக் கல்வியை கொண்டு வந்தார்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி வரலாற்றில் படித்திருப்பீர்கள். தமிழக வரலாற்றில் சங்க கால சேர மன்னர்களின் நாணயங்களை வெளிக்கொண்டு வந்தவர் ‘தினமலர்’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி. 2,000 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆண்ட மாகோதை, குட்டுவன்கோதை எப்படி இருந்தனர் என்பதை நாணயத்தின் மூலமாக வெளிஉலகிற்கு கொண்டுவந்த பெருமை, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியைச் சாரும்.
ஒரு காலத்தில் சென்னையில் பெரிய பள்ளிகளில் இடம் கிடைப்பது கஷ்டமாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது, மாநகராட்சி பள்ளிகளிலும் இடம் கிடைப்பது கஷ்டம் என்ற சூழ்நிலையை உருவாக்கியிருப்பது நீங்களும் உங்கள் ஆசிரியர்களும் தான்.
கடந்த ஆண்டு பிளஸ் 2வில் கடினமான பகுதிகளை நீக்கினோம். கல்லுõரியில் பி.எஸ்சி., வேதியியல் படிக்கும் மாணவர்களுக்கான, ‘டபுள் சால்ட்’ என்ற பகுதியை ஏன் பிளஸ் 2 மாணவர்களுக்கு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டு, அதை உடனடியாக நீக்கினோம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதை படிக்க வேண்டுமோ அதற்கேற்ப பாடப்பகுதிகள் அமைய வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.
தேர்வின்போது 15 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாளை சரியாக படித்துப் பார்க்கவும், மனதை ஒழுங்குபடுத்தவும், குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கும் இது மிகவும் பயன்படும்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம். தேசிங்கு ராஜா செஞ்சிக்கோட்டையின் தலைவன். ஆற்காடு நவாப் பல்லாயிரக்கணக்கான படைகளுடன் செஞ்சிக்கோட்டையை சுற்றிவளைத்தான். 200 வீரர்களுடன் செஞ்சிக்கோட்டையை விட்டு வெளியே வந்த தேசிங்கு ராஜா, ஆற்று வெள்ளத்தை தாண்டி, எதிரி படைத் தளபதியை வீழ்த்தினான். அதைப் போல, எதைப் பற்றியும் பயப்படாமல், பொதுத் தேர்வுகளை சாதாரணமாக எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.
