பள்ளி கட்டடங்களுக்கு வரி ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை
பள்ளி கட்டடங்களுக்கு வரி ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை
UPDATED : நவ 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘பள்ளி கட்டடங்களுக்கு வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்’ என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன் பொதுச் செயலர் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், சுய சார்பு பள்ளிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் கட்டட வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசு அதை ரத்து செய்துள்ளது. பஞ்சாயத்து நகராட்சி மற்றும் மாநராட்சிகளின் வரிவிதிப்பால், கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
அதோடு இந்த வரிச்சுமை சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோரை கஷ்டத்துக்கு ஆளாக்குகிறது. பள்ளிகள் பெரும்பாலும் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அந்தக் கட்டடங்களுக்கு வியாபார ரீதியில் கட்டடவரி நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள் விதிக்க ஏதுவாக உள்ளது.
பள்ளிகளை காலி செய்யுமாறு நெருக்கடி கொடுத்து பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளுகின்றனர். அடிப்படைக் கல்வி அளிக்கும் ஒன்று முதல் 12 வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
