டில்லி சட்டசபை தேர்தலில் ஐ.ஐ.டி., மாணவர்கள் கட்சி போட்டி
டில்லி சட்டசபை தேர்தலில் ஐ.ஐ.டி., மாணவர்கள் கட்சி போட்டி
UPDATED : நவ 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
டில்லி சட்டசபைக்கு நவ. 29ம் தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் முதல்வர் ஷீலா தீட்சித், பா.ஜ., சார்பில் மல்கோத்ரா தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரசிடம் இருந்து ஆட்சியைப் பறிக்க பா.ஜ., தீவிரமாக உள்ளது.
டில்லியைச் சேர்ந்த ஐ.ஐ.டி., மாணவர்கள் 20 பேர், இரண்டாண்டுக்கு முன், ‘பாரத புனர் நிர்மாண தளம்’ என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தனர். அரசியலில் தூய்மையை ஏற்படுத்த விரும்பி, டி.சி.எஸ்., போன்ற முன்னணி சாப்ட்வேர் நிறுவன வேலைகளை உதறினர்.
இப்போது இவர்கள் கட்சியில், 15 ஆயிரம் பேர் உறுப்பினராக பதிவு செய்து கொண்டுள்ளனர். சட்டசபை தேர்தலில் இக்கட்சி சார்பில் இரண்டு பேர் போட்டியிடுகின்றனர். ‘நல்ல அரசியல்வாதியால், இந்த நாட்டின் கஷ்டங்களை போக்க முயற்சிக்க முடியும்; மாற்றத்தை கொண்டு வர முடியும். அதைத்தான் நாங்கள் முயற்சி செய்ய முனைந்துள்ளோம்; சாதித்தும் காட்டுவோம். எங்கள் முதல் இலக்கு ஊழலை ஒழிப்பது தான்’ என்று கட்சியை ஆரம்பித்த 30 வயது அஜித் ஆஷ்வால்யன் கூறினார்.
ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் விஜய் குமார் சர்மா, ஜங்க்புரா தொகுதியிலும், அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த சூர்ய பிரகாஷ் லூன்கர் என்பவர், கிரேட்டர் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
‘அரசியல் கட்சிகள் எல்லாம், ஜாதி யை பாகுபடுத்தி தான் ஓட்டு வாங்குகின்றன. மக்களுக்காக எதுவும் செய்ய முயற்சிப்பதில்லை. நாங்கள் ஜாதியை களைந்து நல்ல சமுதாயத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்’ என்று இந்த இளம் வேட்பாளர்கள் கூறினர்.
இவர்கள் கூட்டம் போடுவதில்லை; வீட்டுக்கு வீடு சென்று தங்கள் தேர்தல் அறிக்கையை அளித்து வருகின்றனர். இளம் தலைமுறையினரிடம் இவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கிறது. இதைப் பார்த்து முக்கிய கட்சிகளின் வேட் பாளர்கள், ‘10 சதவீத ஓட்டுகளை இவர்கள் பறித்து விடுவார்களோ’ என்று கடுப்பில் உள்ளனர். லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த இந்த மாணவர்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
