10 ஆண்டாகியும் "அ" வரிசையை தாண்டாத தமிழ் பேரகராதி பணி
10 ஆண்டாகியும் "அ" வரிசையை தாண்டாத தமிழ் பேரகராதி பணி
UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM
ADDED : ஜூலை 26, 2013 08:12 AM
மொழியின் வளத்தை எடுத்து காட்டும் அளவுகோலாகவும், ஆவணமாகவும் அகராதி உள்ளது. மொழியை கற்பதுடன், மொழி வரலாற்றை அறியவும் முடிகிறது. தமிழ் பேரகராதி, 89ம் ஆண்டுகளுக்கு முன் (1924ல்) வெளியானது.
இணைப்பு தொகுதிகளையும் சேர்த்து, ஏழு தொகுதிகளில், 1924 ஆண்டு முதல் 1939ம் ஆண்டு வரை, 1.24 லட்சம் சொற்கள் கொண்ட பேரகராதியை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தது.
தமிழ் பேரகராதி வெளியாகி, அரை நூற்றாண்டுக்கு மேலாகி விட்டதால், அரசியல், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட, பல துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கம், சமூக, பொருளாதார நிலைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.
துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மொழிகளிலும் பதிவாகியுள்ளது. இம்மாற்றங்களை அகராதியில் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. இதையடுத்து, தமிழ் பேரகராதியை திருத்தியும், புதுமைப்படுத்தியும் உருவாக்கும் திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் மேற்கொண்டது. இதற்கு, பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) நிதி அளிக்க முன்வந்தது.
தமிழ் மொழியின் சொல் வளத்தை காக்கும் வகையில், 12 தொகுதிகளில், புதிய அகராதி வெளிவர திட்டமிடப்பட்டது. தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என, இரு மொழி அகராதியாகவும், வரலாற்று முறையில் பொருள் தருவதாகவும் உருவாக்கப்பட உள்ளன.
தமிழ் பேரகராதி, 1.25 லட்சம் சொற்களுடன் உருவானதையடுத்து, புதுப்பிக்கப்படும் தமிழ் பேரகராதி, 6 லட்சம் சொற்களுடன் உருவாக்க திட்டமிட்டப்பட்டது. 40 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன், 2003, மே மாதம், 1ம் தேதி, பேரகராதி திருத்துதல் பணி துவங்கியது. மூன்று ஆண்டுகளில், இத்திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளாகியும் துவங்க நிலையிலேயே, அகராதி உருவாக்கும் பணி உள்ளது.
முதன்மை பதிப்பாசிரியர், வளமையர், சொல் தேர்வர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டத்தில், 10 ஆண்டுகளில், 1.50 கோடி ரூபாய் செலவழித்தும், அகராதியின் முன்வடிவ நிலை, 11 தொகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன.
இதுவரை தமிழ் பேரகராதி திருத்த பணியில், "அ" வரிசையில் பாதி வரை மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிஞர்கள் இல்லாதது, சரியான இடவசதி இல்லாமை, பணியாளர்கள் மற்றும் நிதி பற்றாக்குறை, திட்ட வரைமுறை இன்மை உள்ளிட்ட காரணங்களால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது: அகராதி திட்ட பணியாளர்களுக்கான ஊதிய தொகையை, சென்னை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. பல மாதங்களாக ஊதியம் கிடைக்காமல், பணியாளர்கள் பலர், வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். திட்டத்தை சரியாக வடிவமைக்காதே பிரச்னைக்கு காரணம்.
புதிய தொழில்நுட்பத்தையும் கையாளவில்லை. சென்னை பல்கலை சென்ட் கூட்டத்திலும் இதுப்பற்றி தெரிவிக்கப்பட்டது. அரசிடமும் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழறிஞர்கள், அர்ப்பணிப்பாளர் இல்லாததே திட்டம் முடங்கி உள்ளதற்கு காரணம். இவ்வாறு, பல்கலை வட்டாரங்கள் கூறின.
இதுகுறித்து, பேரகராதி திட்ட தலைவர் ஜெயதேவன் கூறுகையில், "அகராதி உருவாக்கும் பணி என்பது எல்லோராலும் செய்ய முடியாது. அகராதி கலை அறிவும், ஆழ்ந்த மொழி புலமையும் உள்ளவர்கள் மட்டுமே அகராதி பணியை மேற்கொள்ள முடியும். பேரகராதி தயாரிப்பு பணி இன்னும், ஐந்து ஆண்டுகளில் முடியும்" என்றார்.
