அரசு பள்ளி அருகே வேகத்தடை இல்லை: மாணவர்களுக்கு விபத்து அபாயம்
அரசு பள்ளி அருகே வேகத்தடை இல்லை: மாணவர்களுக்கு விபத்து அபாயம்
UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM
ADDED : ஜூலை 29, 2013 08:09 AM
விருத்தாசலம்: திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கும் அரசு பள்ளி முன்பு, வேகத்தடை இல்லாததால், மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.
திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு, இடைச்செருவாய், பாளையம், ஆக்கனூர் கிராமங்களைச் சேர்ந்த 300 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
திட்டக்குடி - தொழுதூர் நெடுஞ்சாலையோரம் பள்ளி அமைந்துள்ளதால், சாலையைக் கடக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.
அதைத்தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ரப்பர் வேகத்தடை அமைக்கப்பட்டு, வாகனங்களின் வேகம் குறைக்கப்பட்டது.நாளடைவில் வாகனங்களில் சிக்கிய ரப்பர் வேகத்தடை சிதைந்தது. தற்போது, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால், மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, பள்ளி முன்பு, வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
