கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவு
கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவு
UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 08:26 AM
மண்டல கமிஷன் வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், "வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில், இடஒதுக்கீடானது, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது.
இந்த இடஒதுக்கீட்டு முறையால், ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில், ஆண்டுதோறும் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 17 ஆண்டுகளாக, தொடர்ந்து இது நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையால், இந்த ஆண்டு, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியாமல் போன, ஹர்ஷினி என்ற மாணவி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவீத இடஒதுக்கீட்டால், 911வது ரேங்க் பெற்றிருந்தும், என்னால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. அதனால், இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மாணவர்களுக்காக, கூடுதல் இடங்களை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராதா கிருஷ்ணன் மற்றும் சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு "தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவீத இடஒதுக்கீட்டால், பாதிக்கப்படும் மாணவர்களுக்காக, கூடுதல் இடங்களை, நடப்பு கல்வியாண்டான, 2013-14ல் உருவாக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த கல்வி ஆண்டின் போது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, இந்த ஆண்டிக்கும் நீட்டிக்கப்படுகிறது" என தெரிவித்தது.
