தமிழகம் முழுவதும் மருத்துவ பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் மருத்துவ பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 08:35 AM
அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் பயிற்சியில் உள்ள மாணவர்களுக்கு, தொடர்ந்து, 36 மணி நேரம் ஓய்வில்லாமல் பணி வழங்கப்படுவதாகவும், வார விடுமுறை அளிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஏற்கனவே, இதுகுறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டபோது, சுகாதாரத் துறை அமைச்சர், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதாக அறிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, சென்னை ஸ்டான்லி, எம்.எம்.சி., மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பணியிடை போராட்டம் நடத்தினர். இவர்களுடன், தற்போது, இளங்கலை படிக்கும் மாணவர்கள் என, 500 பேர், உணவு இடைவேளையில், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் முன் கூடினர்.
தங்களுக்கு வார ஓய்வு அளிக்க வேண்டும்; செவிலியர்கள் செய்யும் பணிகளை செய்ய நிர்பந்திக்கக் கூடாது; 36 மணி நேர தொடர் பணியை மாற்றியமைத்து, ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற்பகல், 2:00 மணிக்கு, மீண்டும் பணிக்கு திரும்பினர். இதே போல், தமிழகம் முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், அந்தந்த பகுதிகளில், மருத்துவக் கல்லூரி வளாகத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
