அமெரிக்க கல்விக்காக இந்திய மாணவர்கள் செலவிடும் தொகை ரூ.11,800 கோடி!
அமெரிக்க கல்விக்காக இந்திய மாணவர்கள் செலவிடும் தொகை ரூ.11,800 கோடி!
UPDATED : நவ 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடந்த ஆண்டு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் எண்ணிக்கை மட்டும் 94 ஆயிரத்து 500. இதன்மூலம் அமெரிக்கா செல்லும் அயல்நாட்டு மாணவர்களில் சர்வதேச அளவில் ஏழாவது ஆண்டாக இந்திய மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர்.
கல்விக் கட்டணம், உணவு, இருப்பிடம் என அமெரிக்காவில் படிக்கும் மொத்த அயல்நாட்டு மாணவர்கள் ஆண்டுக்கு சுமார் 15.5 பில்லியன் டாலர் செலவிடுகின்றனர். இதில் இந்திய மாணவர்கள் செலவிடுவது மட்டும் 2.36 பில்லியன் டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 11 ஆயிரத்து 800 கோடி.
மாணவர்கள் உதவித்தொகை பெற்று அமெரிக்காவில் படித்தாலும், 62 சதவீத அயல்நாட்டு மாணவர்கள் தங்களது சொந்த பணத்தையே செலவிடுகின்றனர். இதன்படி பார்த்தால், அமெரிக்க கல்விக்காக இந்திய மாணவர்கள் ஆண்டுக்கு செலவிடும் தொகை 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய்.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் எஜுகேஷன் (ஐ.ஐ.இ.,) நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்திய மாணவர்கள் இவ்வளவு தொகையை செலவிட முக்கிய காரணம் மிகச் சிறந்த கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் மிக குறைவு என்று கூறப்படுகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே கல்வி பெற முடியும் என்பது முக்கிய குறை.
எனவே, இந்தியாவில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை நிறுவ அனுமதி அளிப்பதால், இந்த இமாலய தொகையை இந்தியாவிலேயே செலவிட வைக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த யோசனைக்கு இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
