கல்வி உதவித்தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
கல்வி உதவித்தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 10:56 AM
திருப்பூர்: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவர் குடும்பத்தின் வருமான உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: "அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாயாக இருந்ததை, தமிழக அரசு நடப்பாண்டு முதல் இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மாணவர்கள் இத்திட்டங்களில் கல்வி உதவித்தொகை பெறலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி, படிப்பு கட்டணம் ஈடு செய்யப்படும்.
உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களை, பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே, உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்." இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.