UPDATED : ஆக 02, 2013 12:00 AM
ADDED : ஆக 02, 2013 09:31 AM
பீகார், சரண் மாவட்டம், மோல்னாபூரில் உள்ள அரசுப் பள்ளியில், நேற்று, வழக்கம் போல், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள், அங்குள்ள கை பம்பில், தண்ணீர் பிடித்து குடித்தனர். சிறிது நேரத்தில், இரண்டு மாணவியர் மயங்கி விழுந்தனர்.
மேலும் ஒன்பது மாணவர்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உடன், சம்பவம் நடந்த பள்ளிக்கு, மாவட்ட கலெக்டர், அபிஜித் சின்கா, எஸ்.பி., சுஜித் குமார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். பின், மாணவர்கள் 11 பேரும், பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து, கலெக்டர், சின்கா கூறுகையில், "மாணவர்கள் நலமாக உள்ளனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை," என்றார்.
பீகாரில், ஜூலை 16ல், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள், 23 பேர் பலியாயினர். அதைத் தொடர்ந்து, கோபால்கஞ்ச் மாவட்டத்தில், சுகாதாரமற்ற தண்ணீரைப் பருகிய மாணவர்கள் நான்கு பேருக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, அரசு பள்ளியில் உள்ள குழாயில், தண்ணீர் குடித்த, 11 மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.