பொறியியல் மாணவர்களையும் தொற்றிக்கொண்ட வன்முறைக் கலாச்சாரம்
பொறியியல் மாணவர்களையும் தொற்றிக்கொண்ட வன்முறைக் கலாச்சாரம்
UPDATED : ஆக 03, 2013 12:00 AM
ADDED : ஆக 03, 2013 10:58 AM
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், நான்காம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே, கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.
செம்மஞ்சேரி, ராஜிவ் காந்தி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர், நான்காம் ஆண்டு மாணவர்கள் சிலரை தாக்கி உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த, நான்காம் ஆண்டு மாணவர்கள், நேற்று காலை முதல் கல்லூரியில் உள்ள, உணவு விடுதி, வகுப்பறைகள் என, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருந்த அனைத்து இடங்களுக்கும் சென்று, அவர்களை, உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
பதிலுக்கு, மூன்றாம் ஆண்டு மாணவர்களும், கற்களை கொண்டு வீசினர். இந்த மோதலில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். கல்லூரி உணவகம், வகுப்பறைகளும் சேதமடைந்தன.
இதை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் மற்றும் செம்மஞ்சேரி போலீசார், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மூன்றாம் ஆண்டு மாணவர்களை கைது செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பின்னர், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட நான்காம் ஆண்டு மாணவர்கள், ராஜிவ் காந்தி சாலையில், ஒன்று கூடினார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம், கல்லூரி பேருந்துகள் மூலம், மாணவர்களை அங்கிருந்து அழைத்து சென்றது. இது குறித்து, போலீசில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மாணவர்கள் மோதலை அடுத்து, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.