கல்விக்கட்டண விவகாரம்: பல்கலை மாணவியர்கள் கலெக்டருக்கு கோரிக்கை
கல்விக்கட்டண விவகாரம்: பல்கலை மாணவியர்கள் கலெக்டருக்கு கோரிக்கை
UPDATED : ஆக 03, 2013 12:00 AM
ADDED : ஆக 03, 2013 11:22 AM
தஞ்சாவூர்: "தமிழகத்தில், உயர்கல்வி பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர் கல்விக்கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுகொள்ளும் என்னும் முதல்வர் அறிவிப்பை தஞ்சை கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்" என, கலெக்டரிடம் தமிழ்ப் பல்கலை., மாணவியர் கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சை தமிழ்ப்பல்கலை கல்வியியல் மேலாண் துறை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி மாணவியர்கள் 20க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகம் நேற்று வந்தனர்.
தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கரனிடம் மாணவியர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர் நலன் கருதி உயர்கல்வி படிக்கும் மாணவர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார்.
ஆனால், தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கல்லூரிகளின் மாணவ, மாணவியரிடம் இருந்து கல்வி கட்டணத்தை சேர்க்கையின்போதே, பெற்று விட்டனர். கல்லூரியில் கட்டிய கட்டணத்தை திரும்ப மாணவ, மாணவியருக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட முதல்வர் உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.