கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: முதல் நாளில் 150 பேர் ஆப்சென்ட்
கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: முதல் நாளில் 150 பேர் ஆப்சென்ட்
UPDATED : ஆக 06, 2013 12:00 AM
ADDED : ஆக 06, 2013 07:55 AM
தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 5,000க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான, பணியிட மாறுதலை, பொது கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள, 10 ஆண்டுக்கு முன், அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், பொது கலந்தாய்வு முறையில், இடமாறுதல் நடந்து வருகிறது.
நடப்பாண்டிற்கான பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, நேற்று (5ம் தேதி), சென்னை, ராணிமேரி கல்லூரியில் நடந்தது. கலந்தாய்வில், பல மாவட்டங்களில் இருந்து வந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
முதல் நாளான நேற்று, தமிழ், இந்தி, வணிகவியல், பொருளாதாரம், உளவியல் உள்ளிட்ட, பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க, 264 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 113 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கலந்தாய்வு முடிவில், 94 பேர், தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு, இடமாறுதல்களை பெற்றனர்.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது: நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள மொத்தம், 754 பேர் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.
வரலாறு, புவியியல், புள்ளியியல், மின்னணுவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை (இன்று) நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வில், 148 பேர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

