புதுச்சேரியில் வரலாற்றை அறிவை வளர்க்கும் நாணயவியல் கண்காட்சி தொடக்கம்
புதுச்சேரியில் வரலாற்றை அறிவை வளர்க்கும் நாணயவியல் கண்காட்சி தொடக்கம்
UPDATED : ஆக 10, 2013 12:00 AM
ADDED : ஆக 10, 2013 10:34 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று துவங்கிய நாணயவியல் கண்காட்சியில், அரிய வகை நாணயங்கள், பணத் தாள்கள், கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தொண்டை மண்டல நாணயவியல் கழகம் சார்பில், மூன்று நாட்கள் நாணயக் கண்காட்சி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி நேற்று காலை துவங்கியது.
கண்காட்சியில், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலம் மற்றும் பிற்கால சேர, சோழ, பாண்டிய, பல்லவர் கால நாணயங்களின் தொகுப்புகள், விஜயநகரப் பேரரசு, செஞ்சி, தஞ்சாவூர், மதுரை நாயக்க மன்னர் காலத்து காசுகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார், ஹைதராபாத் நிஜாம் கால நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஹிட்லர் ஆட்சிக் கால ஜெர்மன் பணத்தாள்கள், பிளாஸ்டிக் கரன்சி ரூபாய் நோட்டுகள், பிரெஞ்சிந்திய பணத்தாள்கள், தங்கத்திலான பணத்தாள்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட, அரிய வகை ரூபாய் நோட்டுகள், தமிழ் எழுத்துக்கொண்ட நாணயங்கள், அதோடு, பழங்காலத்து கலைப்பொருட்கள், ஓலைச் சுவடிகள், சோழர் காலத்து போர் வாள்கள் என, அரிய வகை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியில், பொதுமக்கள் விரும்பும் நாணயங்கள் உள்ளிட்ட, அரிய வகை பொருட்களை வாங்குவதற்காக, நாணய விற்பனை ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி, 11ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 வரை நடக்கிறது.
பொதுமக்கள் அதிக அளவில், காண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரிய வகை நாணயங்கள் மற்றும் அரிய பொருட்களை பார்வையிட்டு வருகின்றனர்.
