UPDATED : ஆக 20, 2013 12:00 AM
ADDED : ஆக 20, 2013 10:28 AM
கோவை: "கம்பர் பல லட்சம் தமிழ் சொற்களை உருவாக்கி இருக்கிறார். அவற்றுக்கு எல்லாம் பொருள் தெரிந்து கொள்ள கூடிய, நல்ல தமிழ் அகராதிகள் தமிழில் இல்லை" என, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார்.
"மகாகவி பாரதி அறநிலை" சார்பில் நாஞ்சில் நாடன் எழுதிய, "கம்பனின் அம்பறாத் தூணி" என்ற நூல் குறித்த திறனாய்வு கருத்தரங்கு, கோவை ஜி.கே.டி., ஹாலில் நடந்தது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசியதாவது:
கம்பனுக்கு இணையாக இனி ஒரு கவிஞன் பிறக்கப்போவதில்லை. கம்ப ராமாயணத்தை விட சிறந்த இலக்கியம், தமிழில் வேறு இல்லை. கம்பர் பல லட்சம் தமிழ் சொற்களை உருவாக்கி இருக்கிறார். அவற்றுக்கு எல்லாம் பொருள் தெரிந்து கொள்ள கூடிய, நல்ல தமிழ் அகராதிகள் தமிழில் இல்லை. சிறந்த மொழி பெயர்ப்பு நூல்கள், தமிழில் வெளி வரவில்லை. அரிய இலக்கிய நூல்கள் பல மறுபதிப்பு செய்யாமல் அழிந்து வருகின்றன.
"தமிழ் எங்கள் மூச்சு" என்று சொன்னவர்கள், தமிழுக்கு என்ன செய்தனர்? 300 கோடி ரூபாய் செலவு செய்து செம்மொழி மாநாடு நடத்தினர்; அதனால், தமிழ் மொழிக்கு என்ன நன்மைகள் ஏற்பட்டது? கம்பனை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், கம்பனின் கவிதை ஆற்றல் குறித்து இப்படி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற திட்டம் எதுவும் எனக்கு இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கம்பன் கழக விழாக்களில் பங்கேற்றதன் விளைவாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இதை எழுதிய பின், கம்பராமாயணம் குறித்து இன்னும் பல நூல்களை எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டுள்ளது." இவ்வாறு, நாஞ்சில் நாடன் பேசினார்.
கோபி செட்டிப்பாளையம், "கம்பன் கழக" தலைவர் பழனிச்சாமி, கவிஞர்கள் ஆண்டாள் பிரியதர்சினி, மரபின்மைந்தன் முத்தையா, மகேஸ்வரி சற்குரு, விஜயா பதிப்பகம் வேலாயுதம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
