எம்.இ., கலந்தாய்வில் ஆர்வம் குறைவு: 10 ஆயிரம் இடங்கள் காலி
எம்.இ., கலந்தாய்வில் ஆர்வம் குறைவு: 10 ஆயிரம் இடங்கள் காலி
UPDATED : ஆக 27, 2013 12:00 AM
ADDED : ஆக 27, 2013 08:45 AM
சென்னை: எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., போன்ற முதுகலை படிப்பு சேர்க்கையில், நேற்று வரை, 6,000 இடங்கள் மட்டும் நிரம்பின. 29ம் தேதி, கலந்தாய்வு முடியும்போது, 10 ஆயிரம் இடங்கள் வரை, காலியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக, அண்ணா பல்கலையில், எம்.இ., - எம்.டெக்., சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது. 17,500 இடங்கள், கலந்தாய்வுக்கு வந்தன. இதற்கு, 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். எனினும் கலந்தாய்வுக்கு, மாணவர்கள் அதிகளவில் வரவில்லை. இதனால், நேற்று வரை, 6,000 இடங்கள் மட்டும் நிரம்பின. வரும், 29ம் தேதியுடன், கலந்தாய்வு முடிகிறது.
மூன்று நாட்களில், மேலும், 1,000 இடங்கள் வரை நிரம்பலாம் எனவும், 10,500 இடங்கள் நிரம்பாத நிலை ஏற்படும் எனவும், பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதுகலை படிப்பை படிக்க, அதிக செலவழிக்க வேண்டிய நிலை மற்றும் ஆசிரியர் தொழிலுக்கு வருபவர்கள் மட்டுமே, எம்.இ., படிக்க வருகின்ற நிலை போன்றவற்றின் காரணமாக, அதிக இடங்கள் நிரம்பாமல் உள்ளன என கூறப்படுகிறது.
