அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்: அரசு நடவடிக்கை தாமதம் ஏன்?
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்: அரசு நடவடிக்கை தாமதம் ஏன்?
UPDATED : ஆக 27, 2013 12:00 AM
ADDED : ஆக 27, 2013 08:46 AM
சென்னை: "அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் விவகாரத்தில், தமிழக அரசு, விரைந்து முடிவு எடுக்க வேண்டும்" என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தில், 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இன்றி இயங்கி வருகின்றன. இந்த பிரச்னையில், தமிழக அரசு நிர்ணயித்த நிபுணர் குழு, மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து, அரசிடம், அறிக்கையை சமர்ப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும், அரசுத் தரப்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின், பொதுக்குழு கூட்டம், பொதுச் செயலர் நந்தகுமார் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், "அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, உடனே, அங்கீகாரம் வழங்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளைப் போல், அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கும் முறையை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என, மாற்ற வேண்டும்" என்பது உட்பட, 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
