மதுரை புத்தகத் திருவிழா: ஒரு லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்கள்
மதுரை புத்தகத் திருவிழா: ஒரு லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்கள்
UPDATED : ஆக 28, 2013 12:00 AM
ADDED : ஆக 28, 2013 07:52 AM
மதுரை: மதுரையில், ஆக.,30 முதல் செப்.,9 வரை நடக்கும் புத்தகத் திருவிழாவில், ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் வைரவன், பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: புத்தகப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், மதுரை 8வது புத்தகத் திருவிழா ஆக.,30ல், தமுக்கத்தில் துவங்குகிறது. 135 தமிழ் மற்றும் 72 ஆங்கில பதிப்பாளர் அரங்குகள் என, 200க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன.
இதுதவிர ஒளி, ஒலி கணினி அரங்குகள், உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தேசிய புத்தக நிறுவனங்களும் பங்கேற்கின்றன. அனைத்து அரங்குகளிலும் சேர்த்து, 50 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. தினமும் மாலையில் நடக்கும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளில், தமிழகத்தின் முன்னணி இலக்கியவாதிகள், பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
விழாவை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் துவக்கி வைக்கிறார். அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன் செல்லப்பா உட்பட பலர் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடக்கின்றன. ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு, 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி உண்டு.
கடந்தாண்டு 2 லட்சம் பேர் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றனர். இந்தாண்டு 3 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றனர். பேட்டியின்போது, மதுரை புத்தகத் திருவிழா தலைவர் புருஷோத்தமன், சர்வோதய இலக்கியப் பண்ணை செயலாளர் திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளர் செந்தூரன் உடனிருந்தனர்.
