பார்வையற்றவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
பார்வையற்றவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
UPDATED : ஆக 28, 2013 12:00 AM
ADDED : ஆக 28, 2013 07:54 AM
பார்வையற்ற மற்றும் பார்வை குன்றிய திறனாளிகளுக்கு, அரசு உயர் பதவிகளுக்கான தேர்வில் முன்னுரிமையும், வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடும் வேண்டுமென்று, தேசிய பார்வையற்றோர் அமைப்பு சார்பில், மூத்த வழக்கறிஞரான, பார்வையற்ற எஸ்.கே.ருங்டா, டில்லி ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த கோரிக்கையை பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி, பி.சதாசிவம், நீதிபதிகள், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய, பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில், "அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு என, இடஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக, தனியாக இடஒதுக்கீடு வழங்க இயலாது" என்றார்.
மனுதாரரான, எஸ்.கே.ருங்டா வாதிடுகையில், "பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில், அதிக திறமையிருந்தும், ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் வாய்ப்பை பெறுவதற்கு போராட வேண்டியுள்ளது. எனவே, அரசின் உயர் பதவிகளுக்கான தேர்விலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும், தனி இடஒதுக்கீடு அளிக்க வகை செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கு, பல முன் உதாரணங்களை சுட்டிக்காட்டி உருக்கமாக வாதாடினார். இவ்வழக்கின் விசாரணை, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
