பெரியார் பல்கலையில் நிதி முறைகேட்டை கண்டித்து பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
பெரியார் பல்கலையில் நிதி முறைகேட்டை கண்டித்து பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
UPDATED : செப் 01, 2013 12:00 AM
ADDED : செப் 01, 2013 08:42 AM
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், நிதி மற்றும் நிர்வாக முறைகேடு பெரிய அளவில் நடந்துள்ளது. துணைவேந்தர் முத்துசெழியனிடம், ஊழல் கண்காணிப்புத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி பேராசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. பல்கலையில் நடக்கும் நிர்வாக முறைகேடு, துணைவேந்தர் முத்துசெழியன் செயல்பாடு குறித்து நடந்த இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
பெரியார் பல்கலையில், சட்ட விதிகளை மீறி, 39 பேராசிரியர் நியமனம் நடந்துள்ளது. திருச்சி பாரதிதாசன், கோவை பாரதியார் பல்கலையில், இதுபோன்ற நியமனம் நடந்த போது, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஊழல் கண்காணிப்புத்துறையினர், அங்கு விசாரணை மேற்கொண்டனர். தற்போது, பெரியார் பல்கலையிலும் நடந்துள்ளது. அதுபோன்ற விசாரணை, பெரியார் பல்கலையில் நடத்தப்பட வேண்டும்.
நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.பி.ஏ., படித்த மாணவருக்கு, தவறான முறையில், இன்ஸ்டிடியூஷனல் டிரெய்னிங் என்ற பாடத்துக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணையே, பிரின்ஸ்பில்ஸ் ஆஃப் காமர்ஸ் என்ற பாடத்துக்கும் வழங்கி முறைகேடு நடந்துள்ளது. உயர்கல்வி அமைச்சகம், அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஓய்வு பெறுவதற்கு, இன்னும் மூன்று மாதமே உள்ள நிலையில், எந்தவொரு பணி நியமனம், கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவசர முடிவுகளை எடுத்துள்ளார் துணைவேந்தர். தமிழக அரசு, உடனடியாக ஊழல் கண்காணிப்புத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும், என உண்ணாவிரதத்தில் பங்கேற்றோர் பேசினர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
