"சமுதாயத்தை உருவாக்கும் களமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்"
"சமுதாயத்தை உருவாக்கும் களமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்"
UPDATED : செப் 14, 2013 12:00 AM
ADDED : செப் 14, 2013 08:29 AM
மதுரை: "நல்ல சமுதாயத்தை உருவாக்கும் களமாக ஒவ்வொரு ஆசிரியர்களும் திகழ வேண்டும்" என மதுரையில் தினமலர் நாளிதழ் நடத்திய "லட்சிய ஆசிரியர்" கட்டுரை போட்டியில், பரிசு பெற்றவர்களை வாழ்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி பேசினார்.
தினமலர் நாளிதழ் நடத்திய "லட்சிய ஆசிரியர்- 2013" கட்டுரைப் போட்டியில், வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி, அவர் பேசியதாவது: கட்டுரை போட்டி மூலம் லட்சிய ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களை வெளிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள, தினமலர் நாளிதழுக்கு முதலில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் விரும்பி ஏற்கும் பணியாக, ஆசிரியர் பணியை ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும். இப்போது, ஆசிரியர்களின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் பதிவாகின்றன. நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து, ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கும் உன்னத பொறுப்பு, ஆசிரியர்களுக்குள்ளது. பள்ளி சென்ற பின், ஆசிரியர்கள் சொல்வதுதான் ஒவ்வொரு மாணவர்களுக்கு வேத வாக்கு.
புத்தகத்தில் உள்ளதை மட்டும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல், சிந்திக்கும் திறனையும் வளர்க்க செய்ய வேண்டும். அனைத்து ஆற்றலும் நிறைந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும். ஒருவரின் சிந்தனை அடிப்படையில் தான் செயல்பாடு அமையும். எனவே, சமுதாயத்தில் பொறுப்புள்ள ஆசிரியர்களுக்கு, பாசிட்டிவ் சிந்தனை அவசியம்.
புதிய விஷயங்களை தாங்கள் கற்றுக்கொண்டு, மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர் சமுதாயம் இல்லை என்றால், ஆசிரியர் சமுதாயம் இல்லை. இன்றைக்கு ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்கேற்ப அவர்களின் அர்ப்பணிப்பு பணியும் அதிகரிக்க வேண்டும்.
மாணவர்களின் செயல் வடிவம் தான் ஆசிரியர்கள். நல்ல சமூகத்தை உருவாக்கும் களமாக பள்ளி வளாகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க உறுதியேற்க வேண்டும். "லட்சிய ஆசிரியர்" விருது பெற்ற நீங்கள் எழுத்தில் (கட்டுரையில்) தெரிவித்துள்ளது போல், செயலிலும் ஈடுபட்டு, நல்ல மாணவர்களை உருவாக்க பாடுபட வேண்டும், என்றார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 33 ஆசிரியர்களுக்கு தினமலர் கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
