தினமலருக்கு நன்றி: "லட்சிய ஆசிரியர்" விருது பெற்றோர் நெகிழ்ச்சி
தினமலருக்கு நன்றி: "லட்சிய ஆசிரியர்" விருது பெற்றோர் நெகிழ்ச்சி
UPDATED : செப் 14, 2013 12:00 AM
ADDED : செப் 14, 2013 08:29 AM
மதுரை: "லட்சிய ஆசிரியர்கள்" கட்டுரை போட்டி மூலம் "சிற்பிகளின் உளியை தீட்டிய தினமலர் நாளிதழுக்கு நன்றி" என விருது பெற்ற ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுற்றனர்.
"தினமலர்" நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட "லட்சிய ஆசிரியர்" கட்டுரைப் போட்டியில், வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டன. விருது பெற்ற ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடனும், உணர்ச்சியுடனும் பேசியதாவது:
சசி பிரியா: 13 ஆண்டுகள் ஆசிரியர் பணிக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் இது. இவ்விருது மூலம் என் ஆசிரியர் பணியை நன்றாக செய்திருக்கிறேன் என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது.
மகமூதா: தினமலர் நாளிதழின் இந்த முயற்சி, சிற்பிகளின் (ஆசிரியர்கள்) உளியை (பணி) தீட்டும் செயல். உளி கூர்மையாக இருந்தால் தான், செதுக்கும் சிற்பம் (மாணவர்) அழகாகவும், ரசிக்கும் விதமாகவும் இருக்கும். தொடர்ந்து இப்போட்டிகளை தினமலர் நடத்த வேண்டும்.
கார்மல் மேரி: பல எண்ணங்களை எழுதியும், பேசியதுடன் நின்று விடாமல், இவ்விருது கிடைத்ததன் மூலம் அதற்கு செயல்வடிவம் கொடுக்கவும் எங்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
அமுதா: அதிகாலை 4 மணிக்கு கட்டுரையை எழுதினேன். இதில் வெற்றி பெற்று பரிசு பெற்ற போது "நல்லாசிரியர் விருது" கிடைத்தது போல் மகிழ்ச்சி ஏற்பட்டது.
வாசகர்: சமுதாய அக்கறையுடன் ஆசிரியர்களுக்கு போட்டி நடத்தி, விருது வழங்கி கவுரவித்துள்ளது மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
சுவாமிநாதன்: விருது மூலம் எங்களுக்கு சிறந்த ஆசிரியர் அங்கீகாரம் அளித்த "தினமலர்" நாளிதழுக்கு நன்றி. ஓழுக்கம், பெற்றோரை மதிப்பது, சமூக அக்கறையுடன் மாணவர்களை உருவாக்கும் உன்னத பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.
காசிராஜன்: ஆசிரியர்களின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, தட்டிக்கொடுத்தும், தட்டிக்கேட்டும் வரும் தினமலர் நாளிதழ் விருது கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஜான்சன்: நல்லாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். கிடைக்கவில்லை. ஆனால், தினமலர் நாளிதழ் மூலம் எனக்கு கிடைத்த விருது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்: மனஅழுக்குகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, தினமலர் நாளிதழ் அளித்துள்ள இதுபோன்ற அங்கீகாரம், எங்களை மேலும் சிறப்பாக பணிபுரிய தூண்டும்.
டேவிட்: போட்டி தேர்வுக்கு தயாராகும் போது தினமலர் படிக்க துவங்கினேன். "ஏன், எதற்கு, எப்படி" என சாக்ரட்டீஸ் எழுப்பிய கேள்வி போல், பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் "ஒரு வார்த்தை தலைப்பு" எங்களை ஈர்த்துள்ளது. அறிவு பசியை ஏற்படுத்தி, அமைதி புரட்சியை தினமலர நாளிதழ் ஏற்படுத்துகிறது.
ஈஸ்வரன்: இந்த விருது எங்களின் ஆசிரியர் பணி மேலும் சிறக்க, தூண்டுகோலாக இருக்கும். ஆண்டு தோறும் இப்போட்டியை நடத்த வேண்டும்.
