நிதி இன்றி தத்தளிக்கும் கடல் ஆராய்ச்சி மையம்: திணறும் மாணவர்கள்
நிதி இன்றி தத்தளிக்கும் கடல் ஆராய்ச்சி மையம்: திணறும் மாணவர்கள்
UPDATED : செப் 15, 2013 12:00 AM
ADDED : செப் 15, 2013 09:43 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதுமடத்தில், மதுரை காமராஜ் பல்கலையின், "கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சி துறை" நிர்வாக அனுமதி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், மாணவர்கள் கடலில் ஆராய்ச்சி செய்ய முடியவில்லை; திட்டங்களும் முடங்கியுள்ளன.
மன்னார் வளைகுடா கடலில், அரியவகை உயிரினங்கள் உள்ளன. இங்கு கடல்சார் ஆராய்ச்சிக்காக, மாணவர்கள் இங்கு தான் வரவேண்டும்; ஆனால், அதற்கான கட்டமைப்புகள் இல்லை. மதுரை காமராஜ் பல்கலையின் அப்போதைய பேராசிரியர் குமரகுரு (தற்போது மனோன் மனியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர்), 20 ஆண்டுகளுக்கு முன், மாணவர்களின் ஆராய்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்; மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடத்தினார்.
அவரது முயற்சியால், புதுமடம் கடற்கரை அருகே, அப்பகுதியை சேர்ந்த சிலர், 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினர். அங்கு, 2001 ல், "காமராஜ் பல்கலை கடல் மற்றும் கடல்சார் ஆய்வு மைய"த்தை துவக்கினார். இரண்டு கட்டடங்களுடன் துவங்கிய மையம், பின், தனித்துறையாக மாறியது.
ஆரம்பத்தில், கடலில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, இரண்டு படகுகள்; படகுகளை கொண்டு செல்வதற்கான வாகனம்; நவீன ஆய்வுக்கூடம்; ஆராய்ச்சி மாணவர்கள், கடலில் சென்று உயிரினங்களை படம் பிடிக்க "ஸ்கூபா டைவிங்" உபகரணங்கள் உட்பட வசதிகளையும் ஏற்படுத்தினார்; தற்போது இத்துறை, பெயரளவில் மட்டும் உள்ளது.
ஆராய்ச்சி துறைக்கான, பல்கலை நிர்வாக துறை, இங்கு தனியாக இல்லாததால், பணிகளை சுயமாக செய்ய முடியவில்லை. மேலும், நிதி பற்றாக்குறையால், இங்குள்ள படகுகளை கூட, பழுது பார்க்க முடியாமல், பயன் இன்றி உள்ளன. மீனவர்களிடம் வாடகைக்கு படகுகளை பெற்று, கடலில் ஆராய்ச்சி செய்யும் நிலையில், மாணவர்கள் உள்ளனர்.
இங்குள்ள, 26 மாணவர்களுக்கு விடுதி இல்லாததால், வாடகைக்கு தங்கியுள்ளனர். பயிற்சி முகாம், கருத்தரங்கு நடத்த, பல்கலையின் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கருத்தாளர்களை அழைத்து வருவது போன்ற செலவுக்கு கூட, போதிய நிதியில்லை; இதனால், மாணவர்கள், ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
இந்நிலையில், பல்கலையில் புதிதாக "ஸ்கூபா டைவிங்" டிப்ளமோ படிப்பு துவங்கி உள்ளனர். அதற்கும் இம்மையத்தில் தான், பயிற்சி மேற்கொள்ள முடியும். ஆனால், நிர்வாக அனுமதி போன்ற நடைமுறை சிக்கலால், உபகரணங்கள் கூட வாங்க முடியவில்லை.
மொத்தத்தில், "கடல் மற்றும் கடல்சார் ஆய்வு மையம்" திரிசங்கு நிலையில் தத்தளிக்கிறது. புதுச்சேரி பல்கலையின் கடல் ஆராய்ச்சி மையம், அந்தமானில், அனைத்து கட்டமைப்புகளுடன் செயல்படுகிறது. இதே போல், புதுமடத்திலும், கட்டமைப்புகளை மேம்படுத்த, உயர்கல்வித்துறை முயற்சிக்க வேண்டும்
