திருநின்றவூர் தனியார் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு
திருநின்றவூர் தனியார் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு
UPDATED : செப் 16, 2013 12:00 AM
ADDED : செப் 16, 2013 11:28 AM
திருவள்ளூர்: தனியார் கல்லூரி நிர்வாகம் மீது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் பகுதியில், ஒரு தனியார் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று முன்தினம் மதியம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, ஆட்சியர் வீர ராகவ ராவிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: "நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இல்லாததால் விபத்துகள் நடக்கிறது. கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். கல்லூரி வளாகத்தில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அரசாங்க விடுமுறை அன்று கூட கல்லூரி நடக்கிறது.
மேலும், பல்கலைக் கழகத்திலேயே ஐந்து மணி நேரம் மட்டுமே, கல்லூரி நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர். அதற்கு மாறாக, ஏழு மணி நேரம் கல்லூரி நடத்துகின்றனர். இதனால், வெகு தொலைவில் உள்ள மாணவிகள் குறித்த நேரத்தில் தங்களது வீடுகளுக்கு செல்ல முடிவதில்லை." இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
