அச்சுத்தொழிலுக்கு இளைஞர்கள் வரும் வகையில் திட்டங்கள்: "பபாசி"யின் புதிய தலைவர் யோசனை
அச்சுத்தொழிலுக்கு இளைஞர்கள் வரும் வகையில் திட்டங்கள்: "பபாசி"யின் புதிய தலைவர் யோசனை
UPDATED : செப் 22, 2013 12:00 AM
ADDED : செப் 22, 2013 09:28 AM
சென்னை: "அச்சுத் தொழிலுக்கு வருவதற்கு, இளைஞர்கள் மட்டுமின்றி, பலரும் அஞ்சுகின்றனர். இந்நிலையை மாற்றி, அவர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம், புதிய திட்டங்கள் தீட்டப்படும்," என, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, "பபாசி"யின், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, மீனாட்சி சுந்தரம் கூறினார்.
நிர்வாகிகள் தேர்வு
இச்சங்கத்துக்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும், இரண்டு ஆண்டு காலம், இவர்கள் இப்பதவியில் நீடிப்பர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், புத்தக வாசகர்களிடையே பிரபலமானது.
இச்சங்கம் சார்பில், சென்னையில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் புத்தக கண்காட்சிக்கு பலத்த வரவேற்பு உண்டு. அதுமட்டுமின்றி, சென்னையை தவிர்த்து, பிற இடங்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சிக்கும், பலத்த வரவேற்பு இருக்கும்.
இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடந்தது. மொத்தமுள்ள 450 உறுப்பினர்களில் 359 உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர்.
இதில், தலைவர் - மீனாட்சி சுந்தரம்; துணைத் தலைவர் (தமிழ்) அமர்ஜோதி; துணைத் தலைவர் (ஆங்கிலம்) சத்திய நாராயணன்; செயலர் - புகழேந்தி; இணைச்செயலர் - ராமானு ஜம்; பொருளாளர் - ஒளி வண்ணன்; துணைச் செயலர் (தமிழ்) - ஆடம் சாக்கிரடீஸ்; துணைச்செயலர் (ஆங்கிலம்) - அசோக்குமார்; செயற்குழு உறுப்பினர்கள் (தமிழ்) - அப்துல் ரகுமான், பத்ரி சேஷாத்ரி, கோமதி நாயகம், பழனி, சரவணன், சவுந்திரராஜன்; நிரந்தர புத்தககாட்சி உறுப்பினர்கள் (தமிழ்) - பூபதி, முத்துசாமி; செயற்குழு உறுப்பினர்கள் (ஆங்கிலம்) - ஜனார்த்தனன், நந்தன் கிஷோர், ராய்மோகன், சிவகுமார், பாலாஜி லோகநாதன், சுப்ரமணியன்; நிரந்தர புத்தக காட்சி உறுப்பினர்கள் ( ஆங்கிலம்) - ஸ்ரீதர், சுவாமிநாதன் ஆகிய பொறுப்புக்கு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பயிற்சி வகுப்புகள்
மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: புத்தக கண்காட்சிகளை நடத்துவது மட்டுமே, "பபாசி"யின் வேலை அல்ல; பலரும் அச்சுத்தொழிலுக்கு வருவதில்லை. அவர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம், திட்டங்கள் தீட்டப்படும். பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். பிழை திருத்தம், வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில், பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
