UPDATED : செப் 24, 2013 12:00 AM
ADDED : செப் 24, 2013 09:33 AM
தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, 12 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில் 12 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா, செப்., 13ம் தேதி திறந்து வைத்தார்.
இதில், ஐந்து கல்லூரிகளில் இதுவரை முதல்வர் நியமனம் செய்யப்படவில்லை. அடிப்படை பணியாளர் நியமனங்களும் நடக்கவில்லை. கழிப்பறை வசதி இல்லை. மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் அவதியடைகின்றனர். தற்காலிகமாக கழிப்பறை வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
பல கல்லூரிகளில் கணினி வசதி இல்லாததால் கல்லூரி முதல்வர்கள் சுற்றறிக்கைகளை கைகளில் எழுதும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பி.எஸ்சி., கணினி வகுப்பு மாணவர்களுக்கு, இதுவரை கணினி லேப் வசதி செய்து தரப்படவில்லை. நூலக வசதிகளும் இல்லை.
இதுகுறித்து, அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொது செயலர் மூர்த்தி கூறியதாவது: புதிதாக, 12 அரசு கல்லூரிகளில், முதற்கட்டமாக பி.ஏ., (ஆங்கிலம், தமிழ்) பி.காம்., பி.எஸ்சி., (கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல்) பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இதில் 3,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
ஒரு பாடத்திற்கு இரண்டு ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பாடத்திற்கு ஆசிரியர் நியமனம் நடக்கவில்லை. கல்லூரி துவங்கி, 20 நாட்களாகியும் இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மாணவர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். புதிய கல்லூரிகளில், அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, மூர்த்தி கூறினார்.
