UPDATED : செப் 24, 2013 12:00 AM
ADDED : செப் 24, 2013 10:01 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் நேருஜி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிழல் தரும் மரங்களை வெட்டியும், விளையாட்டு மைதானத்தில் மண்ணை கொட்டியதாலும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல் நேருஜி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, நூறு ஆண்டுகள் பழமையானது. இப்பள்ளியில் நிழல் தரும் மரங்கள் மற்றும் கிளைகள் பல நேற்று வெட்டப்பட்டன. மேலும் திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் புதுப்பிப்பதற்காக இடிக்கப்பட்ட மண்ணை விளையாட்டு மைதானத்தில் கொட்டியுள்ளனர். இதனால் மாணவர்கள் விளையாட முடியாமல் உள்ளனர்.
தலைமை ஆசிரியர் வி.சுப்புராமன் கூறுகையில், "நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டடங்கள் பெயின்ட் அடித்து, மராமத்துப் பணிகள் செய்யப்படுகின்றன. காய்ந்த மரங்களில் இருந்து புழுக்கள் கொட்டுவதாலும், வகுப்பறைக்குள் வெளிச்சம் கிடைக்காததாலும் கிளைகள் வெட்டப்பட்டுள்ளது.
மைதானத்தில் கொட்டிய மண்ணை அள்ளுவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் தரப்பட்டுள்ளது. விரைவில் மண் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்,"என்றார்.
நகராட்சி கமிஷனர் குமார் கூறுகையில், "நகராட்சி பள்ளியில் டைல்ஸ், மொசைக் மற்றும் பெயிண்டிங் பணிகள் நடப்பதால், இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்டியுள்ளோம். எந்த மரத்தையும் முழுமையாக வெட்டவில்லை. மைதானத்தில் கொட்டியுள்ள மண் அள்ளப்படும்," என்றார்.
