புதிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை: செமஸ்டர் தேர்வுகள் ரத்து
புதிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை: செமஸ்டர் தேர்வுகள் ரத்து
UPDATED : டிச 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
காரைக்குடி: சென்னை, காரைக்குடி, ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட 11 அரசு கல்லூரிகளில் துவக்கப்பட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பதினாறு அரசு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி.பி.ஏ., பி.சி.ஏ., எம்.சி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட 11 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதுகுறித்து இக்கல்லூரி முதல்வர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
புதிய பாடப்பிரிவுகள் திருவண்ணாமலை, சென்னை, வாலாஜாபேட்டை, நந்தனம், அம்பேத்கர், திருப்பூர், பொன்னேரி, பரமக்குடி, காரைக்குடி, சேலம், ராமநாதபுரம், திருநெல்வேலி கல்லூரிகளில் துவக்கப்பட்டன. கடந்த அக்டோபரில் மாணவர் சேர்க்கை நடந்தது.
புதிய பாடப்பிரிவுகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை அரசு நியமிக்காததால், வகுப்புகள் இன்றி மாணவர்கள் திரும்பிச் சென்றனர். இதனால், 11 கல்லூரிகளிலும் இப்பாடப்பிரிவுகளுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் கே.ஜி.பழனி கூறுகையில், ரத்தான முதல் செமஸ்டர் தேர்வுகள், இரண்டாவது செமஸ்டருடன் சேர்த்து நடத்தப்படும் என இயக்குனரகம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் நியமனத்திற்குப் பின், அடுத்த கல்வி ஆண்டில் பாடப்பிரிவுகளைத் துவக்க வலியுறுத்தினோம். சட்ட சபையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பதால் அவசர கதியில் துவக்கப்பட்டன.
தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப் பட்டு நியமனம் செய்யப்படாதவர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்த ஆலோசனை வழங்கினோம். கோரிக்கைகளை அரசு ஏற்காததால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
