சட்டக் கல்லூரியில் கலந்துரையாடல் மையம்: பெற்றோர் வலியுறுத்தல்
சட்டக் கல்லூரியில் கலந்துரையாடல் மையம்: பெற்றோர் வலியுறுத்தல்
UPDATED : டிச 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சட்டக்கல்லூரியை ஜாதி, அரசியல் தலையீடின்றி நடத்த வேண்டும், வேற்றுயையைக் களையும் வகையில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என கலந்தாய்வுக் கூட்டத்தில் பெற்றோர் வலியுறுத்தினர்.
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, கல்லூரி இழுத்து மூடப்பட்டது. இது தொடர்பான வழக்கில், கல்லூரியில் பேராசிரியர், பெற்றோர் கூட்டத்தை மாதம்தோறும் கூட்ட வேண்டுமென உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், வக்கீல்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சட்டக் கல்லூரி வளாகத்தில் டிச. 8ம் தேதி நடந்தது. கல்லூரி முதல்வர் இக்பால் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர், ‘கல்லூரியில் நடந்த கலவரத்திற்கு ஜாதி அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தான் காரணம். படிக்க வந்த மாணவர்கள் தற்போது பீதியில் உள்ளனர். எங்கள் குழந்தைகளை கவுன்சிலிங் கொடுத்து தேற்றி வருகிறோம். சாதி, அரசியல் தலையீடின்றி கல்லூரியை நடத்த வேண்டும்.
வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் மாணவர்கள் செயல்படும் வகையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். மாணவர்களின் குறைகளை களைய கலந்துரையாடல் மையம் ஒன்று துவக்க வேண்டும்’ என்றனர். இவை செயல்படுத்த அனைத்து முயற்சிகள் எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் கூறினார்.
வெறிச்சோடிய அரங்கம்: கல்லூரியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆனால், கலந்தாய்வில் எட்டு பெற்றோரும், 32 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால், 300க்கும் மேற்பட்டோர் அமரும் அரங்கம் வெறிச்சோடிக் கிடந்தது. தகவல்கள் பெற்றோரைச் சென்றடையவில்லை என்று பலர் வேதனை தெரிவித்தனர்.
