போலீஸ் தேர்வு கேள்வித்தாள் ‘அவுட்’: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
போலீஸ் தேர்வு கேள்வித்தாள் ‘அவுட்’: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
UPDATED : டிச 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: போலீஸ் எழுத்துத் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 19 போலீசார் மற்றும் 12 தனியாருக்கு தொடர்பிருப்பதாக ஐகோர்ட்டில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 1,997 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு, 2005ம் ஆண்டு நடந்தது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 2005ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்கு முன்பாகவே கேள்வித்தாள் வெளியானதால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 1ம் தேதி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அத்தேர்வுக்கான கேள்வித் தாளும் வெளியானது. இந்த மோசடியில் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பணியாற்றும் போலீசாருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் உத்தரவின்படி, 2006ம் ஆண்டு சி.பி.ஐ., போலீசார் விசாரணையைத் துவக்கினர்.
அவர்கள், 92 பேர் மீது குற்றம் சுமத்தினர். விசாரணை முடிவில் 19 போலீசார், 12 தனியார் உட்பட 31 பேர் மீது குற்றப்பத்திரிகை நேற்று சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சி.பி.ஐ., போலீசார் வெளியிட்ட பத்திரிகை குறிப்பு:
போலீஸ் எழுத்துத் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, 158 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். 19 போலீசார் உட்பட 31 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் தொடர்புடைய மின்வாரிய கூடுதல் டி.ஜி.பி., பாலச்சந்திரன், போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐ.ஜி., ராதாகிருஷ்ணன் ஆகியோரது கவனக்குறைவால் தவறு நடந்துள்ளது. அவர்கள் இருவர் மீதும் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
