சரியாக அமைக்கப்படாத மாநகராட்சி "ஸ்கேட்டிங்" மைதானத்தால் குழந்தைகள் பாதிப்பு
சரியாக அமைக்கப்படாத மாநகராட்சி "ஸ்கேட்டிங்" மைதானத்தால் குழந்தைகள் பாதிப்பு
UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 10:21 AM
கோவை: கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான "ஸ்கேட்டிங்" மைதானம் முழுமையாக அமைக்கப்படாமல் அரைகுறையாக இருப்பதால் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கோவை வ.உ.சி.,பூங்காவுக்கு எதிரில் மாநகராட்சிக்குச் சொந்தமான "ஸ்கேட்டிங்" மைதானம் அமைந்துள்ளது; இந்த மைதானத்தில் கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆண்டுக்கு 500 ரூபாய் வீதம் மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தி இங்கு பயிற்சி பெறுகின்றனர்; பயிற்சி அளிக்கின்ற பயிற்றுனர்களுக்கு தனியாக மாதாந்திரக் கட்டணம் செலுத்துகின்றனர்.
இங்கு பயிற்சி பெற்றுள்ள சிறுவர், சிறுமியர் பலரும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான "ஸ்கேட்டிங்" போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவித்து கோவைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் பயிற்சி பெறும் மாநகராட்சி "ஸ்கேட்டிங்" மைதானமானது போதிய வசதிகளின்றியும், பாதுகாப்பின்றியும் இருப்பதால், அடுத்த கட்டத்துக்குச் செல்லும் வகையில் அதிவேக பயிற்சி பெறுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன; சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், 3மீ., மட்டுமே அகலத்தில் இருந்த "ஸ்கேட்டிங்" தளத்தை 6மீ., அளவுக்கு அகலப்படுத்தியது சற்று ஆறுதலான விஷயம்; இருப்பினும், மைதானம் முழுமையாக நிரவப்பட்டு தளம் அமைக்கப்படாத காரணத்தால் பயிற்சி பெறும் சிறுவர், சிறுமியர் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த மைதானத்தின் நடுவில் உள்ள முதற்கட்ட பயிற்சி தளத்துக்கும் பிரதான சறுக்குப்பாதைக்கும் இடையில் உள்ள பகுதி வெறும் மண்ணாகவுள்ளது. சறுக்குப் பாதை அமைந்துள்ள தளத்துக்கும் மண்ணுக்கும் உயர வித்தியாசம் இருப்பதால், வளைவுகளில் வேகமாக "ஸ்கேட்டிங்" செய்யும் குழந்தைகள் எளிதாகத் திரும்ப இயலுவதில்லை.
சென்னை, டில்லி போன்ற பெரு நகரங்களில் உள்ள "ஸ்கேட்டிங்" மைதானங்களில் இத்தகைய இடைவெளி எதுவும் இல்லாமல் முழுமையாக தளம் அமைக்கப்பட்டிருப்பதால் வேகமாக பயிற்சி பெறுவதற்கு வசதியாக இருக்குமென்று விபரமறிந்த பெற்றோர் கூறுகின்றனர்.
ஏற்கனவே, இந்த மைதானத்தின் ஓரத்தில் வரிசையாக மரங்கள் உள்ளன; அப்படியிருக்கையில் இந்த மைதானத்தின் நடுவிலும் சில மரங்கள் வைக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது; அவற்றில் ஒரே ஒரு மரம் மட்டுமே தற்போது வளர்ந்து வருகிறது; அவற்றையும் முற்றிலுமாக அகற்றி விட்டு, முழுமையாக தளம் அமைத்தால் பயிற்சி பெறுவது நன்றாக இருக்குமென்பது "ஸ்கேட்டிங்" வீரர்களின் ஆலோசனையாகவுள்ளது.
அதேபோல, இந்த மைதானத்தில் பயிற்சி பெறும் குழந்தைகள் மற்றும் அவர்களை அழைத்து வரும் பெற்றோர்களுக்கு கழிப்பிட வசதி ஏதுமில்லை. குழந்தைகள் உடை மாற்றுவதற்கான அறையும் இல்லை; பெற்றோர் அமர்ந்து, குழந்தைகள் பயிற்சி பெறுவதைப் பார்க்கவும் இருக்கைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் இதற்காக நிதி ஒதுக்கி மைதானத்தை மேம்படுத்தினால் இன்னும் ஏராளமான குழந்தைகள் பயிற்சி பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு.
மாநகராட்சி உதவிப் பொறியாளரிடம் கேட்டபோது, "முன்பிருந்ததை விட இந்த மைதானத்தின் சறுக்குப்பாதை அகலப்படுத்தப்பட்டுள்ளது; இதற்கு மேலும் இந்த மைதானத்தை மேம்படுத்த வேண்டுமெனில், மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்; அதன் பின்பே மதிப்பீடு தயாரித்து பணிகளை மேற்கொள்ள முடியும்," என்றார்.
விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டும் கவுன்சிலர்கள் யாராவது இதற்காக குரல் கொடுத்தால் நல்லது.
