பெரியார் பல்கலையில் தொடரும் சர்ச்சை: விதிமுறை மீறும் துணைவேந்தர் குழு
பெரியார் பல்கலையில் தொடரும் சர்ச்சை: விதிமுறை மீறும் துணைவேந்தர் குழு
UPDATED : நவ 17, 2013 12:00 AM
ADDED : நவ 17, 2013 11:35 AM
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில் இயக்குனராக பொறுப்பு வகித்தவரை விடுவித்துவிட்டு இதுவரை எஸ்டாபிளிஸ்மென்ட் ஆகாத துணை இயக்குனர் பதவிக்கு ஒருவரை நியமித்துள்ளது பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. முறைகேடுகளுக்கு துணைபோகும் துணைவேந்தர் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்த முத்துச்செழியன், தன் பதவிக்காலம் முடிந்ததும் தொழில்நுட்பக்கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த் தலைமையிலான குழுவிடம் துணைவேந்தர் பொறுப்பை ஒப்படைத்தார்.
பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பின் பல்வேறு விதிமுறைகளையும், அதிகாரத்தையும் மீறி பல முடிவுகளை எடுத்து முறைகேட்டுக்கு வழிவகுத்து வருவதாக இக்குழு மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பெரியார் பல்கலையில் இத்துணைவேந்தர் குழு கூடியது. இதில் பிரைடு இயக்குனராக பொறுப்பு வகித்த ராஜேந்திரன் என்பவரை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் பதவிக்கு வேறு ஆட்களை நியமிக்காமல், இதுவரை எஸ்டாபிளிஸ்மென்ட் செய்யப்படாத துணை இயக்குனர் பணியிடத்துக்கு விரிவுரையாளர் திருமூர்த்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் அனுமதியின்றி இக்குழு எடுத்துள்ள முடிவு விதிமீறல்கள், முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என, ஆசிரியர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராஜா கூறியதாவது: "பெரியார் பல்கலை., துணைவேந்தர் குழு நியமிக்கப்பட்டதில் இருந்தே தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்து வருகிறது. சிண்டிகேட் அனுமதி பெற்று அதிலும் குறிப்பிட்ட நடைமுறைகளை அமல்படுத்த மட்டுமே பொறுப்பு வகிக்கும் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இரண்டு மாதங்களாக சிண்டிகேட் கூட்டமே கூட்டப்படவில்லை.
தற்போது இயக்குனர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின், அந்த இடத்தில் வேறு பேராசிரியருக்கு பொறுப்பு வகித்திருக்கலாம். ஆனால், எவருக்கும் வழங்கப்படவில்லை. பெரியார் பல்கலையில் இப்பதவியை பொறுப்பு வகிக்கும் அளவுக்கு யாருக்கும் தகுதியில்லை என்ற நிலை இருப்பதாக கூட நினைத்திருக்கலாம். ஆனால், எஸ்டாபிளிஸ்மென்ட் ஆகாத ஒரு பதவிக்கு பொறுப்பு வழங்குவது பெரியார் பல்கலையில் மட்டுமே நடக்கிறது.
பிரைடு பிரிவில் போலி படிப்பு மையங்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது, முறைகேடுகளில் சிக்கியுள்ள படிப்பு மையங்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செயல்படுத்தவே இந்த நடவடிக்கை என தோன்றுகிறது. தொடர்ந்து பல்கலை நிர்வாகத்தை கொச்சைப்படுத்தும் இந்த நடவடிக்கை, உயர்கல்வி மீது அமைச்சருக்கும் கவலையே இல்லையோ என்பதை நிரூபணம் செய்வதாக உள்ளது. துணைவேந்தர் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
