அமெரிக்கன் கல்லூரி மூடல்: முடிந்த செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?
அமெரிக்கன் கல்லூரி மூடல்: முடிந்த செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?
UPDATED : டிச 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: அமெரிக்கன் கல்லூரியில் வகுப்பறைகளுக்கு பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பினர் டிச. 15ம் தேதி பூட்டு போட்டனர். இதனால், கல்லூரி 18ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.
இக்கல்லூரி முதல்வர் பிரச்னை தொடர்பான வழக்கில், துணை முதல்வராக இருந்த அன்புதுரை, முதல்வர் மற்றும் செயலராக நீடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. வழக்கம் போல டிச. 16ம் தேதி மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். ஆனால், வகுப்புகள் பூட்டு போடப்பட்டு இருந்ததால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அன்புதுரை தரப்பினர் கூறுகையில், ‘கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு கோர்ட் தீர்ப்பு கிடைத்த பின்னரே மேல் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு ஓரிரு நாட்களாகலாம். மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்ததாகக் கூறப்படும் செமஸ்டர் தேர்வு செல்லாது. ‘இது தன்னாட்சிக் கல்லூரி என்பதால் பாடத்திட்டம், வினாத்தாள் போன்றவற்றுக்கு கல்விப் பேரவை ஒப்புதல் அளித்த பின்னரே தேர்வு செல்லுபடியாகும். கல்லூரி திறக்கப்பட்டு 25 நாட்களில் தேர்வு நடத்தப்படும். அவர்களால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனமும் செல்லாது’ என்றனர்.
பிஷப் தரப்பினர் கூறுகையில், ‘நாங்கள் பல்கலை மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அனுமதி பெற்றே தேர்வு நடத்தினோம். மறுபடியும் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்படும்’ என்றனர்.
கடந்த மூன்றரை மாதங்களில் பிஷப் தரப்பினர் 11 ஆசிரியர்கள், 37 அலுவலரை நியமித்தனர். 15ம் தேதி கல்லூரிக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பிஷப் தரப்பைச் சேர்ந்த அருள்பிரகாசம் தலைமையில், 137 ஆசிரியர்கள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்குச் சென்றனர். கோர்ட் தீர்ப்பை அடுத்து கல்லூரி நிர்வாகத்தை கலெக்டர், போலீஸ் கமிஷனர் அல்லது கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் ஒப்படைக்கத் தயார் என்று மனு கொடுத்தனர்.
