ரூ.50 ஆயிரம் வரை செலவழிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்
ரூ.50 ஆயிரம் வரை செலவழிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்
UPDATED : டிச 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி பராமரிப்பு செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி இனிமேல், மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை.
50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கும் அதிகாரத்தை தலைமை ஆசிரியர்களிடமே வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வசூலிக்கப்பட்டுவந்த சிறப்புக் கட்டணம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையை ஈடுகட்டுவதற்காக தமிழக அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது.
அதன்படி, பள்ளிக் கல்வித் துறைக்கு 21 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இந்த தொகையை அந்தந்த பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை பகிர்ந்து அளிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு கட்டணத்தின் மூலம் வசூலாகும் நிதியில் இருந்து, உயர்நிலைப் பள்ளிகளாக இருந்தால், 7,500 ரூபாயும், மேல் நிலைப் பள்ளிகளாக இருந்தால், 10,000 ரூபாயும் பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தலாம் என்ற நிலை ஏற்கனவே இருந்தது. ஆனாலும், இந்த நிதியை செலவழிக்க மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் அனுமதியை தலைமை ஆசிரியர்கள் பெற வேண்டிய நிலை இருந்தது.
தற்போது, சிறப்புக் கட்டணத்தை ஈடு செய்து அரசு வழங்கும் நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கும் அதிகாரத்தை தலைமை ஆசிரியர்களுக்கே வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், 50 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரைக்கும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் 75 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவழிக்கும் திட்டங்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரின் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
