மருத்துவ கல்லூரி துவக்கம் தனி நீதிபதி உத்தரவு ரத்து
மருத்துவ கல்லூரி துவக்கம் தனி நீதிபதி உத்தரவு ரத்து
UPDATED : டிச 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: மாநில அரசின் அத்தியாவசிய சான்றிதழை வலியுறுத்தாமல் மருத்துவக் கல்லூரி துவங்கக் கோரும் விண்ணப்பத்தை ஆய்வு செய்யுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுகாவில் தனியார் மருத்துவக் கல்லூரி துவங்க விண்ணப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஐகோர்ட்டில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி, ‘சட்டப்படி, விண்ணப்பத்தை பரிசீலிக்கலாம். மாநில அரசின் அத்தியாவசிய சான்றிதழை வலியுறுத்தாமல் இந்திய மருத்துவ கவுன்சில் பரிசீலிக்க வேண்டும்’ என இடைக்கால உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, இந்திய மருத்துவ கவுன்சில் அப்பீல் மனு தாக்கல் செய்தது. இதை அப்போதைய தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி சந்துரு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மருத்துவ கவுன்சில் சார்பில் வக்கீல் வி.பி.ராமன் வாதாடினார்.
‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, இத்தகைய இடைக்கால உத்தரவை ஐகோர்ட் தனி நீதிபதி பிறப்பித்திருக்கக் கூடாது. தற்போது அத்தியாவசிய சான்றிதழை தமிழக அரசு வழங்கிவிட்டது. இவ்வழக்கின் தன்மை, சூழ்நிலையைப் பார்க்கும்போது, பிரச்னை அவசியமற்றது என்றாலும், தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்கிறோம். அத்தியாவசிய சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதால், அப்பீல் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
