UPDATED : டிச 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “பல்கலைக் கழகங்கள் புதிய ஆராய்ச்சிகள் மூலம், புதிய கோட்பாடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், இணைப்பு கல்லூரிகளை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா டிச. 19ம் தேதி பல்கலையின் விவேகானந்தர் அரங்கில் நடந்தது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவன துணைத் தலைவர் லட்சுமி நாராயணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்தாண்டில் இளங்கலை, முதுகலை, எம்.பில்., மற்றும் பி.எச்.டி., முடித்தவர்கள் என 67 ஆயிரத்து 401 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. இதில் விழாவில் 539 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினரான பெங்களூரு, ராணுவ வான்தகவு சான்றளிப்பு மையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் தமிழ் மணி கலந்து கொண்டார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், பல்கலைக் கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
