UPDATED : டிச 22, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
டி.வி.ஆர்., நினைவு அஞ்சல் தலையை மத்திய அமைச்சர் ராஜா வெளியிட, மிகுந்த உற்சாகத்திலிருந்த முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டு டி.வி.ஆருக்குப் புகழாரம் சூட்டி பேசினார்.
நாகர்கோவில் அருகில் உள்ள தழுவிய மகாதேவர் கிராமத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி டி.வி. ராமசுப்பையர் பிறந்தார். திருவிதாங்கூர் தமிழர்கள், தமிழ்நாட்டுடன் இணைய நடத்திய உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக, ‘தினமலர்’ தேசிய தமிழ் நாளிதழைத் துவங்கினார். திருவனந்தபுரத்தில் 1951ம் ஆண்டு மலர்ந்த ‘தினமலர்’ நாளிதழ், லட்சக் கணக்கான மக்களின் இதயத்தில் இடம்பெற்று என்றும் மணம் வீசும் மலராக மாறியுள்ளது.
‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது நினைவு தபால் தலையை வெளியிட, மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்தது. சென்னை, கலைவாணர் அரங்கத்தில் டி.வி.ஆர்., தபால் தலை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.
விழாவுக்கு வந்திருந்தோரை ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார். மகாகவி பாரதியாரின், ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடலை, செல்வி.மாதங்கி உணர்ச்சிகரமாக பாடி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார்.
தொடர்ந்து, ‘டி.வி.ஆர்., ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில், டாக்டர் சுதா சேஷைய்யன் அறிமுக உரையாற்றி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டி.வி., ராமசுப்பையரின் தபால் தலையை மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, வெளியிட்டு பேசினார். டி.வி.ராமசுப்பையரின் முதல் தபால் தலையைப் பெற்று தமிழக முதல்வர் கருணாநிதி விழாப் பேருரையாற்றினார்.
அப்போது, டி.வி.ஆரின் பெருமைகளை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினார். தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, டி.வி.ஆரின் தபால் தலை திருவுருவப்படத்தையும் திறந்து வைத்தார்.
பாரதியார் பாடலைப் பாடிய செல்வி.மாதங் கிக்கு முதல்வர் நினைவுப் பரிசை வழங்கினார். திரு வனந்தபுரம் பன்னாட்டு திராவிட மொழியியல் பள்ளி கவுரவ இயக்குனர் வி.ஐ.சுப்ரமணியம் வாழ்த் துரை வழங்கினார்.
தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் எஸ்.கே.சக்ரபர்தி, சபாநாயகர் ஆவுடையப்பன், புதுச்சேரி சபாநாயகர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பன்னீர் செல்வம், வேலு, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் இராம. வீரப்பன், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், நீதிபதிகள், கல்வியாளர்கள், தினமலர் நாளிதழ் வாசகர்கள், முகவர்கள், ஊழியர்கள் உட்பட ஏராளமானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
தினமலர் பங்குதாரர்கள் இரா.வெங்கடபதி, இரா.கிருஷ்ணமூர்த்தி, இரா.லட்சுமிபதி, இரா.இராகவன், இரா.சத்தியமூர்த்தி ஆகியோர் முதல்வர் கருணாநிதிக்குப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். விழா நிறைவில், தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதி நன்றி கூறினார்.
