UPDATED : ஜன 17, 2009 12:00 AM
ADDED : ஜன 17, 2009 10:30 AM
வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களின் மீதான கெடுபிடிகளை அதிகரித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. இதனால் இந்திய மாணவர்களே பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளே பெரும்பாலானோரின் தேர்வாக உள்ளது. இந்த நாடுகளில் கல்வித்தரம் சிறப்பாக இருப்பதே இதற்கு காரணம்.
தற்போது ஏறத்தாழ 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கிப்படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை 20 சதவீதம் உயர்கிறது. குறிப்பாக இந்தியா, சீனா, நேபாளத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
ஏறத்தாழ 65 ஆயிரம் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கிப்படித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம். எனினும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 55 சதவீதம் அதிகரிக்கிறது. சீன மாணவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் மட்டுமே உயர்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு, மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. இதனால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
போலியான ஆவணங்களை தாக்கல் செய்வது, விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்பது போன்றவற்றின் காரணமாக விதிமுறைகள் கடுமையாக்கப்படுகிறது என ஆஸ்திரேலிய குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கல் துறை அறிவித்து உள்ளது. எனினும் உண்மையிலேயே படிப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் மாணவர்களை இது பாதிக்காது எனவும் அறிவித்துள்ளனர்.
எனினும் இந்த புதிய விதிமுறைகள் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி இலங்கை, ஜிம்பாப்வே, ஜோர்டான், நைஜீரியா, கானா, ருமேனியா நாடுகளை சேர்ந்த மாணவர்களையும் பாதிக்கும் என கருதப்படுகிறது.
