விவசாய கல்லூரிகளில் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்த திட்டம்
விவசாய கல்லூரிகளில் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்த திட்டம்
UPDATED : ஜன 17, 2009 12:00 AM
ADDED : ஜன 17, 2009 11:23 AM
விவசாயத்துறையின் வளர்ச்சியை முடுக்கிவிடும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் விவசாய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆராய்ச்சி வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயமே திகழ்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 65 சதவீதம் பேர் வாழ்வாதாரமாகவும், வேலை வாய்ப்புக்காகவும் விவசாயத்தையே முழுதும் சார்ந்திருக்கின்றனர். இந்திய ஏற்றுமதியில் விவசாய பொருட்கள் ஏறத்தாழ 9 சதவீத இடத்தை பிடித்துள்ளன.
இந்திய நிலப்பரப்பில் 43 சதவீதம் விவசாயத்துக்கே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காலமாற்றத்தின் காரணமாக இந்தியாவில் விவசாயத்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்தக்கூடிய பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தொழிலை மேம்படுத்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கிராமப்புறங்களில் விவசாயத்தில் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசும் நேரடியாக முயற்சித்து வருகிறது.
இந்தியாவில் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற 40 கல்வி நிறுவனங்களும், ஏறத்தாழ 200 கல்லூரிகளும் விவசாயம் தொடர்பான பாடங்களை வழங்கி
வருகின்றன. இவை 12க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இளநிலைப்படிப்பும், 70க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி வசதியுடன் முதுநிலைப்படிப்பும் வழங்குகின்றன.
விவசாய கவுன்சிலும் இந்த பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிப்பணிக்கு உதவுகிறது. விவசாய கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி வசதிகளையும் மேம்படுத்தவுள்ளனர்.
உலக அளவில் விவசாயத்துறையில் தனது வல்லமையை அதிகரித்துக்கொள்ள மத்திய அரசு, அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலமாக விவசாயத் துறையில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ள முடியும்.
