மாநில சீனியாரிட்டி முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்
மாநில சீனியாரிட்டி முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்
UPDATED : ஜன 18, 2009 12:00 AM
ADDED : ஜன 18, 2009 11:23 AM
திருச்சி: மாநில சீனியாரிட்டி அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை பிப்., 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள துவக்கப்பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் நியமனம், மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையில் நடந்து வந்தது. இதனால், தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பல ஆண்டாகியும் வேலை கிடைக்காமல் உள்ளனர். மற்ற மாவட்டங்களில், 2004ம் ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை பெற்று விட்டனர். இதனால், தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனம், மாநில சீனியாரிட்டி அடிப்படையில், நடைபெற வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மாநில சீனியாரிட்டி அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் நடத்தப்பட வேண்டுமென்று, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாநில சீனியாரிட்டி அடிப்படையிலும், இடஒதுக்கீடு முறையிலும் நிரப்பும் நடவடிக்கையாக, முதல்கட்டமாக மாநில அரசு 5,773 ஆசிரியர்களை நியமனம் செய்யவுள்ளது.
மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதற்கான அரசு உத்தரவு, கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது.
துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில், 2008 டிசம்பர் முதல் தேதி வரை எந்தவொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும் பங்கேற்கலாம். 57 வயது வரையுள்ள ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஜனவரி 22ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் இலவசமாக வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்., 11ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலோ அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது விண்ணப்பம் செய்யும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்., மூன்றாவது வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் தகுதியானவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் நடக்கவுள்ளதால், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மொத்த பணியிடத்தில் 95 சதவீத வேலை வாய்ப்பை பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
