சந்திரயான் -2 விண்கலத்தில் ‘ரோபோ’ : மயில்சாமி அண்ணாதுரை தகவல்
சந்திரயான் -2 விண்கலத்தில் ‘ரோபோ’ : மயில்சாமி அண்ணாதுரை தகவல்
UPDATED : ஜன 18, 2009 12:00 AM
ADDED : ஜன 18, 2009 11:26 AM
சென்னை: “சந்திரயான் - 2 விண்கலத்தில் ரோபோவை அனுப்பி சந்திரனில் உள்ள கனிம, நீர் வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்,” என்று சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சென்னையில் அளித்த பேட்டி:
சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் - 1 விண்கலம் சேகரித்த தகவல்கள், ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. ஜன. 29ம் தேதி பெங்களூருவில் நடக்கும் விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்தத் தகவல்கள் குறித்து விவாதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக அடுத்தகட்ட முயற்சிகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.
சந்திரயான் - 2 திட்டத்திற்கான பணிகள் துவங்கியுள்ளது. 425 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்ட பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில், நம்மோடு வேறு சில நாடுகளும் பங்கு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சந்திரயான் - 1 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்து ஆய்வு மேற்கொள்கிறது. சந்திரயான் - 2 விண்கலம் நிலவிற்கு ரோபோவை அனுப்பி வைத்து ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரனில் உள்ள நீர்வளம், கனிம வளம் குறித்து ரோபோ ஆய்வுகளை மேற்கொள்ளும்.
வரும் 2011ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2012ம் ஆண்டின் துவக்கத்தில் சந்திரயான் - 2 விண்கலம் அனுப்பி வைக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2015ம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்.
நமது மாணவர்கள் விஞ்ஞானத் துறையில் முன்னேறுவதற்கு ‘நாசா’ போன்ற ஆராய்ச்சி மையங்களைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் வகையில் நம் நாட்டிலேயே கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
இதன் காரணமாக யாரையும் நாம் சார்ந்து இருக்க வேண்டியிருக்காது. ஏரோநாட்டிகல் உள்ளிட்ட துறைகளில் நாம் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறோம். இது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
