ஐகோர்ட் உத்தரவுபடி நூலகங்களில் படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்
ஐகோர்ட் உத்தரவுபடி நூலகங்களில் படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்
UPDATED : ஜன 18, 2009 12:00 AM
ADDED : ஜன 18, 2009 01:07 PM
கள்ளக்குறிச்சி: ஐகோர்ட் உத்தரவுபடி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஜனவரி 17ம் தேதி முதல் நூலகங்களில் படிக்க துவங்கியுள்ளனர்.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடந்த போது இரு பிரிவு மாணவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மாணவர்கள் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை மற்றும் சித்திரை செல்வன் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதனால் செமஸ்டர் தேர்வுகள் நிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட மாணவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதி சுதந்திரம், பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களை கவனித்து கொள்ள உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஜாமீன் கிடைத்தவுடன் மாணவர்கள் நான்கு வாரங்கள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பொது நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களை இரண்டு மணி நேரம் படிக்க வேண்டும். என்னென்ன புத்தகங்கள் படித்தனர் என கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன் பேரில் ஜாமீன் பெற்ற மாணவர்கள் ஜனவரி 17ம் தேதி முதல் நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை படிக்கத் துவங்கினர். இவ்வழக்கில் தொடர்புடைய கள்ளக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மூவர் லட்சியம் கிராமம், கிழக்குத் தெருவை சேர்ந்த 3ம் ஆண்டு மாணவர் சத்யராஜ் (22), மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த 2ம் ஆண்டு மாணவர் மேகநாதன் (19) மற்றும் ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த ரவிவர்மன் கள்ளக்குறிச்சி கிளை நூலகத்திற்கு வந்து படிக்கத் துவங்கினர்.
இந்த மாணவர்கள் காமராஜர் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் போன்ற புத்தகங்களை படித்து குறிப்புகள் எடுத்து கொண்டனர்.
