சிவகங்கையில் மருத்துவக் கல்லூரி: அடிக்கல் நாட்டுகிறார் கருணாநிதி
சிவகங்கையில் மருத்துவக் கல்லூரி: அடிக்கல் நாட்டுகிறார் கருணாநிதி
UPDATED : ஜன 20, 2009 12:00 AM
ADDED : ஜன 20, 2009 01:25 PM
சிவகங்கையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிப்., 8ம் தேதி முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்ட உள்ளார்.
சிவகங்கையில் வரும் கல்வியாண்டு முதல் புதிய அரசு மருத்துவக் கல்லூரி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக் கட்டடம் கட்டுவதற்காக சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரி மேற்குப் பகுதியில் 45 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்லூரிக்கு மதுரை-தொண்டி ரோடு மற்றும் சிவகங்கை-மானாமதுரை ரோடுகளுக்கு நான்கு வழி இணைப்பு ரோடு அமைக்கப்பட உள்ளது. இக்கல்லூரிக்கு 105 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இந்த இடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
சிவகங்கையில் 45 ஏக்கரில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்., 8ம் தேதி நடைபெறும். முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
