UPDATED : ஜன 22, 2009 12:00 AM
ADDED : ஜன 22, 2009 10:47 AM
ஆனால், அடுத்த கல்வியாண்டிலும் அமலுக்கு வராது என்பது, மழுப்பலான அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும், எந்த கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்படவில்லை. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை உள்ள நான்கு வகையான கல்வி முறைகளை ஒரே கல்வி முறையாக ஒருங்கிணைக்கும் வகையில், சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று, ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க., அரசு அறிவித்தது.
‘இத்திட்டம், நடப்பு கல்வியாண்டில் அமலுக்கு வரும்’ என்று, கடந்த ஆண்டு சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்; ஆனால், வரவில்லை.
வரும் கல்வியாண்டில் திட்டம் அமலுக்கு வந்துவிடும் என்றும், இது குறித்த அறிவிப்பு கவர்னர் உரையில் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கவர்னர் உரையில், வழக்கம்போல் மழுப்பலான அறிவிப்பே வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, கவர்னர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது குறித்து, வல்லுனர் குழுக்கள், பரிந்துரைகளை அளித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, பிற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, அங்கு பின்பற்றப்படும் பாடத் திட்டங்கள், பாடத்திட்ட வாரியங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, அனைத்து மாணவர்களும் தரமான சமச்சீர் கல்வியை பெற தமிழக அரசு ஆவன செய்யும். இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
திட்டப் பணிகள் துவங்கியுள்ளதா, அப்படி துவங்கியிருந்தால் எந்த நிலையில் உள்ளது, பாடப் புத்தக தயாரிப்பு பணிகள் நடக்கிறதா, எந்த கல்வியாண்டில் இருந்து சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வரும் போன்ற எந்தக் கேள்விக்கும் கவர்னர் உரையில் பதில் இல்லை. இதன் மூலம், வரும் கல்வியாண்டில் திட்டம் அமலுக்கு வராது என்பது உறுதியாகியுள்ளது.
‘சமச்சீர் கல்வித் திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே வகையான பாடப் புத்தகத்தை உருவாக்கினால் மட்டும் போதாது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே அளவிலான வசதிகள் கிடைக்க வேண்டும். இத்தகைய வசதிகளை உருவாக்காமல், பாடத்திட்டங்களை மட்டும் தயாரித்தால் பயனில்லை’ என்று, அமைச்சர் பல முறை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
மாநிலத்தில் உள்ள 4,000 தனியார் பள்ளிகளுக்கு நிகராக, 40 ஆயிரம் அரசு பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்பது சாதாரண பணி கிடையாது. இதற்கு அதிகமான நிதி தேவைப்படும். எனவே, உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்கி, அரசு குறிப்பிட்டிருப்பது போல் மாநில பாடத் திட்டத்தின் தரத்தினை உயர்த்தி முடித்த பிறகே சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வரும். மொத்தத்தில் சமச்சீர் கல்வி திட்டம் என்பது தற்போதைக்கு கனவு தான்.
