இடைநிலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் காஞ்சிபுரத்தில் வினியோகம்
இடைநிலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் காஞ்சிபுரத்தில் வினியோகம்
UPDATED : ஜன 23, 2009 12:00 AM
ADDED : ஜன 23, 2009 10:25 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் ஜனவரி 22ம் தேதி துவங்கியது.
தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாநில சீனியாரிட்டி அடிப்படையிலும், இட ஒதுக்கீடு முறையிலும் அரசு நிரப்ப முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 5,773 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இப்பணிக்கு 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் செங்கழு நீரோடை வீதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், யதோக்தகாரி பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இடைநிலை ஆசிரியர் பணி முடித்தவர்கள் வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பெற்றனர்.
இரண்டு அலுவலகங்களிலும் மாலை 4 மணி வரை தலா 400 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. அடுத்த மாதம் 9ம் தேதி வரை அலுவலக நேரத்தில் விண்ணப்பங்கள் வழங்கப் படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன., 11ம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் அல்லது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
