ஆசிரியர் பள்ளி ஆய்வு: பள்ளிக் கல்வி துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஆசிரியர் பள்ளி ஆய்வு: பள்ளிக் கல்வி துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
UPDATED : ஜன 23, 2009 12:00 AM
ADDED : ஜன 23, 2009 10:30 AM
சென்னை: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை ஆய்வு செய்து இணைப்பு வழங்குவதற்கு வகை செய்யும் புதிய அரசாணை செல்லும் என, பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கு பல்லைக்கழகத்தின் இணைப்பு பெறுவது போல், புதிதாக துவங்கப்படும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், ஏற்கனவே இயங்கிவரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் தமிழக அரசிடம் இணைப்பு பெற வேண்டும்.
மாவட்ட அளவில் நியமிக்கப்படும் குழு நேரில் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின்படி, இந்த இணைப்பை ஆசிரியர் கல்வி இயக்குனர் வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த மே 3ம் தேதி பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்தது.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சுயநிதி தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் சங்கத் தலைவர் பாபு மற்றும் புதிய ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் என 60க்கும் மேற்பட்டோர் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சந்துரு, ‘அரசாணை செல்லும்’ என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் சுயநிதி தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பாபு அப்பீல் மனு செய்துள்ளார்.
இதை, தற்காலிக தலைமை நீதிபதி முகோபாதயா, நீதிபதி தனபாலன் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் முத்துகுமாரசாமி, வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகினர். மனுவுக்கு பதிலளிக்கும்படி பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு ‘முதல் பெஞ்ச்’ தள்ளிவைத்தது.
