விவேகானந்தர் இல்லத்தில் ஓவியக் கண்காட்சி: மாணவ, மாணவியர் ஆர்வம்
விவேகானந்தர் இல்லத்தில் ஓவியக் கண்காட்சி: மாணவ, மாணவியர் ஆர்வம்
UPDATED : ஜன 23, 2009 12:00 AM
ADDED : ஜன 23, 2009 10:39 AM
இந்தாண்டு தேசிய இளைஞர் தினப் போட்டியில், சுவாமி விவேகானந்தரின் உருவத்தை வரையும் ஓவியப் போட்டி இடம் பெற்றிருந்தது. தமிழகம், கேரளா, நாகலாந்து, இலங்கையில் இருந்து 20 ஆயிரத்து 300 இளைஞர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.
இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 500க்கும் மேலான ஓவியங்கள் மெரீனா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, விமூர்த்தானந்தர் கூறியதாவது:
தொடர்ந்து ஆறாண்டுகளாக தேசிய இளைஞர் தினம், விவேகானந்தர் பிறந்த தினத்தை, இளைஞர்களுக்கான பல்வேறு போட்டியாக நடத்தி வருகிறோம். ஓவியப் போட்டி நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 503 ஓவியங்களின் கண்காட்சி விவேகானந்தர் இல்லத்தில் நடந்து வருகிறது. மாணவ, மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதனைக் கண்டு செல்கின்றனர்.
நாட்டிலேயே முதன் முறையாக நடக்கும் இந்தக் கண்காட்சியை, வரும் 26ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். இவ்வாறு விமூர்த்தானந்தர் தெரிவித்துள்ளார்.
