UPDATED : ஜன 24, 2009 12:00 AM
ADDED : ஜன 24, 2009 05:31 PM
இதன் விளைவாக வேலை இழப்பும், சம்பளக் குறைப்பும் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009ம் ஆண்டில் இந்திய வேலைத் துறை என்ன போக்கைக் கடைப்பிடிக்கும் என்பது பற்றி ஒரு சில மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வெவ்வேறு துறைகளின் போக்குபற்றி சில தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
ஐ.டி., மற்றும் ஐ.டி., தொடர்பான துறைகள்:
2007 மற்றும் 2008ம் ஆண்டில் இத்துறைகள் தான் மிக அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளன. ஆனால் நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் ஐ.டி., நிறுவனங்கள் தரவிருக்கும் செயல்பாட்டுப் புள்ளி விபரங்கள் எப்படி இருக்கப் போகிறதோ என்று ஐ.டி., துறையில் பணியாற்றுபவர்கள் கவலையுற்றுள்ளனர்.
எனினும் வேலைத் துறை நிபுணர்கள் ஐ.டி., துறை வாய்ப்புகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று கருதுகிறார்கள். 2009ம் ஆண்டில் கம்ப்யூட்டர் செக்யூரிடி, ஒயர்லெஸ் செக்யூரிடி, இன்பர்மேஷன் செக்யூரிடி போன்ற அம்சங்களுக்காக இத்துறையில் எண்ணற்ற நபர்கள் தேவைப்படுவர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மேலை நாடுகளின் மந்தமான பொருளாதார நிலையால் இந்த நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளில் செலவுக் குறைப்பு ஒரு பிரதானமான அம்சமாக இருக்கும் என்றும் அதனால் இந்த நாடுகளில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணிகளில் சில புதிதாக இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படும் என்றும் கணிக்கப்படுகிறது.
சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தான் அவுட்சோர்சிங்கில் நமக்குக் கடுமையான போட்டி தருபவை. ஆனால் இன்னும் இவை தொழில்நுட்ப அம்சத்திலும் நுணுக்கமான திறன்களிலும் நம்மை விட 7 ஆண்டுகள் பின் தங்கியிருப்பதாக உலக நாடுகள் கருதுகின்றன. எனினும் புதிதாக ஐ.டி., துறைக்கு எடுத்துக் கொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று நம் நாட்டு வேலை வாய்ப்பு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
புதிதாக நல்ல பணி வாய்ப்புகள் உருவாவதில் பிரச்னை இருப்பதால் ஏற்கனவே இருக்கும் பணியிலிருந்து விலகுவது அறிவுறுத்தப்படவில்லை. இது எல்லாத் துறைக்குமே பொருந்தும். இதேபோல சம்பள உயர்வு எதிர்பார்ப்பதும் நடக்கக்கூடியதல்ல என்றே கருதப்படுகிறது.
மனித வளத்துறை:
புதிதாக எச்.ஆர்., தகுதியுடனும் திறன்களுடனும் வெளிவருபவர்களுக்கு நல்ல தேவை காணப்படும். மந்த நிலை நிலவும் போது நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதல் செயல் ஆட் குறைப்பு தான். எனினும் நிறுவனங்கள் அனுமதிக்கும் சுற்றுலா, கல்வித் திட்டங்கள் போன்றவற்றிற்கான செலவு குறைக்கப்படும்.
ஒரு நிறுவனத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் நபர்கள் தவிர பிறர் யாருமே புதிதாக பணிக்கு எடுத்துக் கொள்ளப்படப்போவதில்லை. இப்போது எம்.பி.ஏ.,வில் அதிகமாக பலரால் விரும்பப்படும் பிரிவுகளாக இருப்பது மார்க்கெட்டிங்கும் நிதியும் தான். ஏனெனில் இந்த பிரிவுகளில் தான் சம்பளம் அதிகமாகத் தரப்படுகிறது.
வங்கி மற்றும் நிதித் துறைகள்:
பொதுத் துறை வங்கிகளில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் புதிதாக எடுத்துக் கொள்ளப்படும் நபர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். ஆனால் தனியார் வங்கிகளில் புதிதாக நபர்கள் எடுத்துக் கொள்ளப்படுவது கணிசமாக குறைந்து விடும்.
ராணுவப் பணிகள்:
ராணுவத்தின் 3 பிரிவுகளான தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றிலுமே புதியவர்களைப் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவது தொடர்ந்து நடைபெறும். சம்பளக் கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதால் ராணுவப் பணி வாய்ப்பு என்பது இன்று இளைஞர்கள் பலரையும் இழுப்பதாகக் காணப்படுகிறது. நல்ல உடற்தகுதியும் அடிப்படையில் பொதுத் திறனும் இருப்பவருக்கு இது நல்ல துறையாக விளங்கும்.
எப்.எம்.சி.ஜி., பார்மாசூடிக்கல்:
இந்த ஆண்டு அடிப்படைத் தேவைப் பொருட்களை தயார் செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல காலம் என கணிக்கப்படுகிறது. ஆனால் ஆடம்பரப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். உடல் நலத் துறை போன்ற அடிப்படைத் தேவைகளைத்தரும் துறைகளே இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மீடியா:
மீடியா செயல்பட அவசியம் தேவை விளம்பரங்கள். இதைத் தருவது கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆனால் அவர்கள் கடுமையான சூழலை சந்திப்பதால், மீடியா துறையில் புதிதாக நபர்கள் எடுத்துக் கொள்ளப்படுவது குறையவிருக்கிறது. ஏற்கனவே என்.டி.டி.வி., போன்ற நிறுவனங்கள் இதை செயல்படுத்தத் துவங்கியுள்ளன. எனினும் இந்த நிலை தற்காலிகமானது தான் என மதிப்பிடப்படுகிறது.
கல்வித் துறையில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று வேலை வாய்ப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள். எனவே 2009ம் ஆண்டில் நமது திறன்களை மதிப்பீடு செய்து கொண்டு அவற்றை மேம்படுத்திக் கொள்வது இளைஞர்களுக்கு அவசியம் என இவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் 2009ம் ஆண்டு புதிய வேலைகளுக்கான ஆண்டல்ல என்றும் புதிய திறன்களுக்கான ஆண்டு என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.
