தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக் கடன் கிடைக்காததால் பறிபோன கல்வி: ஒரு ஏழையின் ஏமாற்றம்!

கல்விக் கடன் கிடைக்காததால் பறிபோன கல்வி: ஒரு ஏழையின் ஏமாற்றம்!

கல்விக் கடன் கிடைக்காததால் பறிபோன கல்வி: ஒரு ஏழையின் ஏமாற்றம்!


UPDATED : ஜன 27, 2009 12:00 AM

ADDED : ஜன 27, 2009 03:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2009 12:00 AM ADDED : ஜன 27, 2009 03:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே, ஆயிமாபுதூர், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் குப்புசாமி. திருப்பூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், குப்புசாமி கடந்த 2007ம் ஆண்டு, இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தார்.
இம்மாணவன், கல்வி கடன் பெற முடியாததால், கல்லூரிக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், இம்மாணவனை கல்லூரியில் இருந்து நிறுத்தி விட்டனர்.
இது குறித்து, மாணவர் குப்புசாமி கூறியதாவது:
என் தந்தை சின்னமுத்தான் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். என் தம்பி மற்றும் தங்கை அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 873 மார்க் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றேன். குடும்ப சூழ்நிலையால், இரண்டு ஆண்டுகள் வேலைக்கு சென்றேன்.
இந்நிலையில், ஆசிரியர் பணிக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளதை அறிந்து, 2007ம் ஆண்டு திருப்பூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்தேன். எப்படியும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், கல்வி கடன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், கடன் வாங்கி முதல் கல்வி கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் பணம் கல்லூரியில் செலுத்தினேன்.
அன்னூர் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், கணேசபுரம் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றில், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்ததற்கான உத்தரவு, கட்டண பட்டியல், கல்லூரியின் பரிந்துரை கடிதம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தேன். இரண்டு ஆண்டுகளாக பல முறை நடந்தும் கல்வி கடன் கிடைக்கவில்லை.
இது குறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு 2008ம் ஆண்டு மார்ச் மாதம் மனு அனுப்பினேன். ‘தங்களுடைய மனு உரிய நடவடிக்கைக்காக கோவை கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என பதில் வந்தது. கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு பல மாதங்களாக நடந்தும் இதுவரை பதிலில்லை. டிசம்பரில் நடந்த கல்வி கடன் ‘மேளா’வில் விண்ணப்பம் அளித்தேன்.
முன்னோடி வங்கியான கனரா வங்கி, மாவட்ட மேலாளர் அனுப்பிய கடிதத்தில், ‘அன்னூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு தங்களுடைய மனு அனுப்பப்பட்டுள்ளது. உரிய தகவல்களை தெரிவித்து கடன் பெறலாம்’ என பதில் அனுப்பினார்.
ஆனால், அன்னூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், கடன் தரப்படவில்லை. சுமை தூக்கும் தொழிலாளியின் மகன் என்பதால் திருப்பிச்செலுத்துவார்களோ என்ற சந்தேகத்தில் எந்த வங்கியிலும் கல்வி கடன் தர மறுக்கின்றனர்.
கல்லூரி நிர்வாகத்திடம், பல முறை தவணை தெரிவித்தும் கட்டணம் செலுத்த முடியாததால், கல்லூரியில் இருந்து சென்ற மாதம் நிறுத்தி விட்டனர். இப்போது வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்று வருகிறேன். அரசோ, தனியார் நிறுவனங்களோ கல்விக்கட்டணம் செலுத்த உதவினால், என்னுடைய படிப்பை தொடர முடியும். இவ்வாறு குப்புசாமி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us