ஐ.ஐ.டி.ஜே.இ.இ., இலவச பயிற்சி: பின்தங்கிய மாணவர்களுக்கு பேருதவி!
ஐ.ஐ.டி.ஜே.இ.இ., இலவச பயிற்சி: பின்தங்கிய மாணவர்களுக்கு பேருதவி!
UPDATED : ஜன 27, 2009 12:00 AM
ADDED : ஜன 27, 2009 03:13 PM
சென்னை: ஐ.ஐ.டி.ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு இலவச பயிற்சிக்கான போட்டித்தேர்வு சென்னையில் நடந்தது.
தினமலர் கல்விமலர் இணையதளம், சென்னை ‘பிட்ஜி’ (FIITJEE) இணைந்து நடத்திய இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஐ.ஐ.டி.ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சிறப்பாக படிக்கும் அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெறச் செய்யும் முயற்சியாக இந்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னையில் இரண்டு மையங்களில் நடந்த இதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு மாணவி சரஸ்வதி, காஞ்சிபுரம்: எனது தந்தை ஒரு பெயின்டர். நான் பள்ளி தேர்வுகளில் பொதுவாக, 95 சதவீத மதிப்பெண்களை பெறுகிறேன். சாப்ட்வேர் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது லட்சியம். சாதனை படைக்க திறமைதான் முக்கியம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியரும் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர உறுதுணையாக இந்த பயிற்சி அமையும். இப்பயிற்சிக்கான போட்டித் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவேன். என்னைப் போன்ற பல மாணவ, மாணவியர் இப்பயிற்சியால் பயன்பெறுவர்.
பத்தாம் வகுப்பு மாணவர் நவநீதன், போரூர்: செயின்ட் ஜான்சன் பள்ளியில் படிக்கிறேன். எனது அப்பா இறந்த பிறகு, என் அம்மாவின் பராமரிப்பில் உள்ளேன். உறவினர்கள்தான் எனது படிப்பிற்கு உதவுகின்றனர். எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளராக வர விரும்புகிறேன். இதுசம்பந்தமான படிப்பை ஐ.ஐ.டி.,யில் படிக்க விரும்புகிறேன். எனது சூழ்நிலையில் ஐ.ஐ.டி.ஜே.இ.இ., பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்த முடியாது. இந்த இலவச பயிற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.
பத்தாம் வகுப்பு மாணவர் நல்லையா வெங்கட்ராமன், திண்டுக்கல்: எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில் படிக்கிறேன். எனது தந்தை பிரின்டிங் பிரஸ் வைத்துள்ளார். ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து, சிறந்த கல்வியை படிக்க விரும்புகிறேன். ஐ.ஏ.எஸ்., ஆக வரவேண்டும் என்பது எனது கனவு.
எட்டாம் வகுப்பு மாணவர் பிரேம் பிரசாந்த், சென்னை: விவேகானந்தா பள்ளியில் படிக்கிறேன். எனது தந்தை ஒரு தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரிகிறார். ஐ.ஐ.டி.,யில் படித்து சிறந்த மெக்கானிக்கல் இன்ஜினியராக வரவேண்டும். இதற்காக தற்போதிருந்தே முழுமுயற்சியுடன் படித்து வருகிறேன். தினமலர், பிட்ஜியின் இந்த அரிய வாய்ப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
பத்தாம் வகுப்பு மாணவி மைத்ரேயி, ஆவடி: ஐ.எச்.எம்., அரசி பெண்கள் பள்ளியில் படிக்கிறேன். எனது அப்பா சினிமா தியேட்டரில் வேலை செய்கிறார். ஐ.ஐ.டி.,யில் நானோடெக்னாலஜி படித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எனது லட்சியத்திற்கு பேருதவியாக இந்த இலவச பயிற்சி திட்டம் அமைந்துள்ளது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எட்டாம் வகுப்பு மாணவி மோனிஷா, பொன்னேரி: அப்பா பால் வியாபாராம் செய்கிறார். வேலம்மாள் பள்ளியில் படிக்கும் நான் குறைந்தபட்சம் 90 சதவீத மதிப்பெண்களை பெற்றுவிடுவேன். ஆனால், தனியார் நிறுவனம் வழங்கும் பயிற்சியில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாது. பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்குவது நல்ல விஷயம். இது இன்னும் நிறைய பேருக்கு பயன்பட வேண்டும்.
